Friday, September 3, 2010

கிருஷ்ணனே – உலகத்தின் முதல் கம்யூனிஸ்ட்


கிருஷ்ணன் போர்க்களத்தின் நடுவில் சிரித்துக் கொண்டே நிற்கிறான். குருசேத்ர களம். பல்லாயிரக்கணக்கில் யானைப் படைகள், குதிரைப்படைகள், தேர்ப்படைகள் மற்றும் காலாட் படைகள் அணிவகுத்து நிற்கின்றன. போர் தொடங்குவதற்காக பல்வகை சங்குகள் முழங்கத் தொடங்குகின்றன. கிருஷ்ணனின் கையில் பாஞ்ச சன்யம் என்னும் அற்புத சங்கு (கிருஷ்ணன் வாயில் வைத்து ஊதும் சங்காக நாம் பிறந்திருக்கக் கூடாதா என கோபியர்கள் ஏங்கி விரகத்தில் தவித்தது தனிக்கதை) இருக்கிறது. கிருஷ்ணனும் யுத்தத்திற்கு தயாராக இருப்பதாகத் தெரிவிக்கும்பொருட்டு பாஞ்ச சன்யம் என்னும் அந்த அற்புதச் சங்கை எடுத்து அவனது பவளவாயில் பொருத்தி ஊதுகிறான். பல போர்களில் திறமையாக யுத்தம் செய்த அர்ஜுனன் எதிர்படையினரை பார்க்கிறான். பதட்டத்தால் நடுங்கி அவனது கையிலிருந்த காண்டீபம் நழுவி கீழே விழுகிறது. அவனது கால்களில் மயிர்கள் குத்திட்டு வியர்வை அரும்புகிறது. மனக்கிலேசமடைந்து அவனது உடலில் திடீரென ஒருவித அரிப்பு தோன்றுகிறது. அவனுக்கு ஏற்பட்ட இந்த பதட்டம் போர்பயத்தால் ஏற்பட்டது அல்ல. அர்ஜுனன் பல போர்களில் பலரை வெட்டிச் சாய்த்தவன். பின் ஏன் இந்த பதட்டம் அவனுக்கு? காரணம் – எதிர்படையில் நிற்பவர்களைப் பார்க்கிறான். அங்கே அவனோடு இளம் வயதில் பழகி வாழ்ந்த விளையாட்டுத் தோழர்கள், மாமன்கள், மதிப்புமிக்க பீஷ்மர், பங்காளிகள், உடன்பிறவாச் சகோதர சொந்த பந்தங்கள், மைத்துனர்கள் எல்லோரும் அணிவகுத்து நிற்கிறார்கள். அப்பொழுது அர்ஜுனன் தனக்குள் நினைக்கிறான் – ‘ரத்தத் தொடர்புடைய உறவுகளையும், சொந்த பந்தங்களையும் போரில் வெட்டிச் சாய்த்துவிட்டு ராஜ்ஜியத்தை அடைவதால் என்ன பயன்?’


மேலும் அர்ஜுனன் நினைக்கிறான் – ‘இந்த சொந்த பந்தங்களை போரில் கொன்றுவிட்டால் அவர்கள் வீட்டுப்பெண்கள் பாதிக்கப்படுவதோடு, அடுத்தடுத்த தமது தலைமுறைகளில் பிறக்கும் குழந்தைகள் வர்ணக் கலப்புடையவர்களாக இருப்பார்களே!’
இத்தகைய குழப்பங்களில் சிக்கியிருக்கும் அர்ஜுனனுக்கு, தெளிவை உண்டாக்குவதற்காக பற்று, உறவு, ரத்த சொந்தம் இதெல்லாம் வெறும் மாயை எனவும், பிரபஞ்ச இயக்கம் எனும் மேடையில் நடிக்கப்படும் தற்காலிக நாடகம்தான் இந்த வாழ்க்கை எனவும் அவனுக்கு தொடர்ந்து உபதேசிக்கும்விதமாக கிருஷ்ணன் பதினெட்டு அத்தியாயங்களில் பிறப்பு, இறப்பு, ஆன்மா, மோட்சம், கர்ம பலன், தியானம், பக்தி, கடவுள் தன்மையின் வெவ்வேறு ரூபங்கள், அடையும் மார்க்கங்கள் என அழகழகான கவிதைகளில் விவரித்துச் சொன்னவை இன்றைய ஐன்ஸ்டீன் முதல் அப்துல்கலாம் வரையிலான அறிவியல் அறிஞர்களுக்கும் கடவுள் தேடல் கொண்டவர்களுக்கும் வழிகாட்டி அழைத்துச் செல்லும் சாரதியாகத் திகழ்கிறது.
கிருஷ்ணன் கீதையில் சொல்லியிருக்கும் பல புரட்சிகரமான கருத்துக்களையே, பிற்காலத்தில் வந்த சமூக சீர்திருத்தவாதிகளும், புரட்சிக்காரர்களும் இந்நாள்வரை பேசிக் கொண்டு இருக்கிறார்கள்.
எப்பொழுதெல்லாம் தர்மத்திற்கு பாதிப்பு ஏற்பட்டு அதர்மம் தலைதூக்குகிறதோ அப்பொழுதெல்லாம் நான் அவதரித்து வருவேன் – அநீதிக்கு எதிராக மாபெரும் பிரகடனத்தை அறிவித்த முதல் போராளியாக கிருஷ்ணனே திகழ்கிறான். மேலும் கிருஷ்ணன், சிரத்தையற்று மனம்போன போக்கில் செய்யப்படும் தூய்மையற்ற யாகங்கள் இவற்றை தீவிரமாக எதிர்ப்பவனாகி கீதையின் வழியே பேசுபவனாக இருக்கிறான். அதுபோல எந்தவித பக்தியுமற்று தமது ஆடம்பரத்தையும், செல்வாக்கையும் வெளிக்காட்டுவதற்காகச் செய்யும் யாகங்களையும் கிருஷ்ணன் தீவிரமான விமர்சனத்துக்கு உட்படுத்துகிறான். தற்காலத்தில்கூட யாகங்களில் பங்கேற்கும் பிராமணர்கள் பக்தி சிரத்தை எதுவுமற்று ஆளோடு ஆளாக அவர்களும் சேர்ந்துகொண்டு ‘ஸ்வாஹா’ என்று கோஷ்டிகானம் மட்டும் பாடிவிட்டு அன்றைய நாளுக்கான (daily wage) கூலியை மட்டும் வாங்கி வருகிறவர்களாக இருக்கிறார்கள். இன்னும் சில பிராமணர்கள் யாக குண்டத்தைச் சுற்றிலும் அமர்ந்து கொள்ளும்போது அவர்கள் குந்துவதற்கு மரப்பலகை ஆசனம் ஒரு சிலருக்கு வழங்காவிட்டால் அவர்கள் அதை கௌரவப் பிரச்சினையாக எடுத்துக்கொண்டு யாகம் முடியும்வரை ‘உம்’மென்று மூஞ்சியை வைத்திருப்பார்கள். அவர்கள் அக்னிக்குண்டத்தில் இடும் சிரத்தையற்ற அவிசை தேவதைகள் எப்படி மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்வார்கள்? இதைத்தான் கிருஷ்ணர் ‘சிரத்தையற்ற யாகம்’ என்று விமர்சனம் செய்கிறார்.
மேலும் கிருஷ்ணர் இன்னொரு சுலோகத்தில் சொல்கிறார் – யாகத்தால் மகிழ்ந்த தேவதைகள் அமிர்தத்தை வழங்குவார்கள். சில வரங்களையும் அருள்வார்கள். அதை பிறருக்கு கொடுக்காமல் தான் மட்டுமே எடுத்துக் கொள்பவன் திருடன்- கிடைப்பவற்றை அனைவரும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் பதுக்குபவனை திருடன் என்றும் சொன்ன உலகத்தின் முதல் கம்யூனிஸ்ட் கிருஷ்ண பரமாத்மாதான். அதற்குப் பிறகு ஏறத்தாழ ஐயாயிரம் வருடங்கள் கழித்து காரல்மார்க்சும் ஏங்கல்சும் இதே கருத்தை அப்படியே சொல்கிறார்கள். பொதுவுடமை சித்தாந்தம் தோன்ற முதல் அடி எடுத்துத் தந்தவன் கிருஷ்ணன்.
சமபாவனை பற்றி இன்னொரு சுலோகத்தில் பேசும்போது கிருஷ்ணன் சொல்கிறான்- பசு, படித்த பண்டிதர், பிராமணர், பாவி, சண்டாளன், நாய், பன்றி இவை யாவற்றையும் சமபாவனை கொண்டு, மனதில் ஏற்றத்தாழ்வு எதுவும் எழாதபடி, ஒரே சமநோக்கில் பார்ப்பவன் எவனோ அவனே உண்மையான யோகி.
சாதி மதம் இவற்றை கடந்து மட்டுமல்லாமல் உயர்திணை, அஃறிணை இவற்றிற்கும் அப்பாற்பட்டு உயிர்களை அவை ஆன்மா என்று மட்டும் கருதி கருணை கொள்ளச் சொல்கிறான் கிருஷ்ணன். முதல் சமூக சீர்திருத்தவாதியும் கிருஷ்ணனே.
அடுத்ததாக ஆஷாடபூதிகளை எதிர்ப்பவனாக கிருஷ்ணன் இருப்பதை கீதையின் சுலோகம் வழியே நாம் தெரிந்து கொள்ள முடியும். ஆஷாடபூதிகள் என்பவர் யார்?
பக்தன்போல வேடமிட்டுக் கொண்டும், ஆன்மிகக் காரியங்களை செய்பவன்போல நடித்துக் கொண்டும் ரகசியமாக பல தவறுகளை செய்பவன் ஆஷாடபூதி. கீதையின் இரண்டாம் அத்யாயமாகிய ஸாங்க்ய யோகத்தில் ஓரிடத்தில் இந்த ஆஷாடபூதிகளுக்கு எதிராக கிருஷ்ணன் பேசுகிறான். தற்போதைய காலத்தில் ஆஷாடபூதிகள் என்பவர்கள் வேறு யாருமல்லர் – பெண்கள் கேசில் சிக்கி சிறைக்குப் போன மடாதிபதிகளும், போலிச் சாமியார்களும், ரகசியமாக ஆனந்தங்களை அனுபவித்து கேமிரா கண்ணிகளில் அகப்பட்டுக் கொண்ட இன்னும் பிற ஆஷாடபூதிகள்தான்!



கீதையின் விபூதியோகத்தில் தான் எந்தெந்த ரூபங்களில் இருப்பதாக கிருஷ்ணன் சொல்லிச் செல்கிறான். ஆயுதந்தரித்த ராமனாகவும், இனிய வசந்தகாலமாகவும், பனிபொழியும் மார்கழி மாதமாகவும், பூமாதேவியாகவும், ஸ்ரீதேவியாகவும், துர்க்கையாகவும், அம்பிகையாகவும் தானே வெவ்வேறு ரூபமெடுத்து திகழ்வதாகச் சொல்வதோடு மேலும் கிருஷ்ணன் தான் என்னென்ன விதமாய் பிரபஞ்ச இயக்கத்தில் இருப்பதாகச் சொல்லிச் செல்வதை ஒருவர் கீதையைப் படிக்கும்பொழுது மெய்சிலிர்ப்பையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தும்.
‘ஏமாற்றும் வஞ்சகமான சூது எனும் விளையாட்டாகவும் நான் இருக்கிறேன்’ என்கிறான் கிருஷ்ணன்.
உயிரை எடுக்கும் எமனாகவும் நானே இருக்கிறேன்’ என்றும் சொல்கிறான் அவன். 


‘ஜீவராசிகளிடம் காம உணர்வைத் தூண்டும் மன்மத ரதியாகவும் நானே செயலாற்றுகிறேன்’ என்றும்கூட சொல்கிறான். 

மேலும் படிக்க கீழே உள்ள லின்க்கை க்ளிக் செய்யவும்.



பல சுவாரசியமான செய்திகளுக்கு கீழே உள்ள தல முகவரிக்கு செல்லவும்.

http://www.natpu.in



No comments:

Post a Comment