Sunday, September 5, 2010

பலே பாண்டியா - திரை விமர்சனம்இன்னும் கருப்பு வெள்ளைப்பதிவாக நினைவில் அழியாமல் மீந்திருக்கும் அந்தக்கால “பலே பாண்டியா'' படத்தில் இருந்து ஒரு கருவை எடுத்து நவீனக்கலவை கலந்து கொடுத்திருக்கிறார்கள்.
உயிரைப்போக்கிக்கொள்ள விரும்பும் ஒருவன் தன்னைக் கொல்லச்சொல்லி அதற்குப் பணத்தையும் ஒரு தாதாவிடம் கொடுக்கும்போது - தாதாவுக்கு அவன் மீது பரிவும், அக்கறையும் வருகிறது. ஆனாலும் அவனைக்கொல்ல ஒரு நாளைக்குறித்து செலவுக்குக் கணிசமான பணமும் தருகிறார் தாதா. பணம் கைக்கு வந்து அதைச் செலவழிக்கத் துவங்கியதும் உறவுகளில் இருந்த வெறுப்பு மாறுகிறது. காதல் துளிர்க்கிறது. சுற்றியிருந்த உலகத்தின்மீது நம்பிக்கை பிறக்கிறது. 


காதலியுடன் அந்த தாதாவைப்பார்க்க வரும்போது - அந்த தாதா சுடப்பட்டிருக்கிறார். இதுவரை கலகலப்பாகப் போக திரைக்கதை அதற்குப் பிறகு தத்தளிக்கிறது. அந்த தாதாவைக் கொன்றவர்களையும், தன்னுடைய காதலியைக் கடத்த முயன்றவர்களையும் கடைசியில் தீர்த்துக்கட்டுவதுதான் கதை.
பிறந்ததிலிருந்து தான் சம்பந்தப்பட்ட எல்லாவற்றிலும் பிரச்சினையாக ஏதோ சில சம்பவங்கள் நடந்து கொண்டே இருப்பதாகவும், தற்கொலை முயற்சியில் கூடத்தோற்றுவிட்டதாகவும் சொல்லும் போதும் இவ்வளவுதூரம் மிகைப்படுத்த வேண்டுமா என்கிற கேள்வியைத் தவிர்க்க முடியவில்லை. அதோடு அபத்தமாவும் இருக்கின்றன. 

வெண்ணிலா கபடிக்குழுவில் கதாநாயகனாக நடித்த விஷ்ணுதான் இதிலும் கதாநாயகன். படத்தில் ரசிக்கத்தக்க சில காட்சிகள் இருக்கின்றன. வெளிநாட்டிலிருந்து தமிழகத்திற்குக் காதலியைத் தேடி வரும் கதாபாத்திரம் விவேக்கிற்கு. கழிவறைக்கு இரண்டு ரூபாய் கேட்டதற்கு ''ஒரு ரூபாய்க்கு முன்னாடி லோடு இறக்க அரிசி கொடுக்கிறாங்க. பின்லோடை இறக்க இரண்டு ரூபாயா?' என்று விவேக் கேட்கும் காட்சியில் அரங்கில் கரகோஷம். 

'பலே பாண்டியா'வில் சிவாஜியும் எம்.ஆர்.ராதாவும் பிரமாதப்படுத்திய ''நீயே உனக்கு என்றும் நிகரானவன்'' பாட்டின் சாயலில் இதிலும் ஒரு பாடல். அதைவிட பல பின்னணிப்பாடகர்கள் தோன்றிப்பாடும் 'ஹேப்பி' பாடல் கேட்பதற்கு இனிமை. இசை -புதியவரான தேவன் ஏகாம்பரம். 
பழைய சத்யராஜ் பாணியில் மொட்டையடித்த தலையுடன் எப்போதும் முறைத்தபடி இயந்திரத்தைப் போல சண்டை போடும் 'கச்சிதம்' ஆக வரும் வில்லன், இடையிடையே வரும் சில கவர்ச்சி நடனங்கள், எப்போதும் கத்திப்பேசும் காவல் துறை அதிகாரிகள், எப்போதும் சுற்றிலும் குறைந்தபட்சத்துணியணிந்த பெண்களுடன் இருக்கும் அரசியல்வாதி பாத்திரம் - என்று பல காட்சிகளில் செயற்கைத்தனம்.மிகக் குறைந்த நாட்களில் எடுக்கப்பட்டு குறிப்பிடத்தக்க வெற்றியைப்பெற்ற கறுப்பு வெள்ளைப் படத்தோடு ஒப்பிட்டால் - தலைப்பைத் தவிரப் பெரிதாக ஒன்றும் தேராவிட்டாலும் படத்தின் விரைவுக்காகக் குறைந்தபட்சம் ஓடலாம்.

மேலும் சுவாரசியமான செய்திகளுக்கு கீழே உள்ள லின்க்கை கிளிக் செய்யவும்.


www.cinema.natpu.in


www.natpu.in


தவறாமல் உங்கள் கருத்துக்களை (பின்னூட்டங்களை) பதிவு செய்யவும்..

No comments:

Post a Comment