Tuesday, August 31, 2010

வயிரவன் கோயில் புராணம் - வயிரவன்பட்டி
வடிவுடை அம்பாள் சமேத வளரொளிநாதர் பெருமையையும், வயிரவ சுவாமிகளின் சிறப்பையும் பெரிதும் கூறுவது வயிரவன் கோயிற் புராணம் என்ற செய்யுள் நூலாகும். 19ம் நூற்றாண்டின் இறுதியில் வெளியிடப்பட்ட இந்த நூல் சேந்தன்குடி வி. நடராசக் கவிராயரால் இயற்றப்பட்டதாகும். இந்நூல் தேவக்கோட்டை வித்வ சிகாமணி, மேன்மைசால் வீர.லெ.சிந்நயச் செட்டியார் அவர்களால் குறைகள் களைந்து புதுக்கப் பெற்றுத் திருத்தமாக வெளியிடப்பட்டது. கவிச்சிம்புள் எனவும், கல்விச் சிங்கம் எனவும் கீர்த்தி பெற்ற திரு. வீர.லெ.சிந்நயச் செட்டியார் அவர்கள், தமிழ்ச்சங்கம் கண்ட பாண்டித்துரைத் தேவரின் இனிய நண்பர் ஆவார். திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களாலும், சிவத்திரு சொக்கலிங்க ஐயா அவர்களாலும், மகா மகோபாத்தியாய உ.வே.சாமிநாதையர் அவர்களாலும், பெரிதும் மதிக்கப்பட்ட இவர்கள் நகரத்தார் வரலாறு பற்றிய ஆராய்ச்சி செய்து நூல் வெளியிட்டுள்ளார். அன்னாருடைய புலமைத் திறனும், ஆராய்ச்சி வன்மையும், சிவானந்த ஈடுபாடும் பக்திச்சுவை சொட்டும் கவிநயமும் இப்புராணத்தில் விரவிக் காணப்படுகின்றன. வயிரவன் கோயிலுக்கு ஒரு சிறந்த தலபுராணத்தை வெளியிட்டமைக்குச் சிவநேசச் செல்வர்களும், தமிழ் அன்பர்களும் திரு. சிந்நயச் செட்டியார் அவர்களுக்குப் பெரிதும் கடமைப்பட்டுள்ளார்கள். அன்னாருடைய பொன்னார் திருவடிகளைப் போற்றி வணங்குகிறேன்.


  


புராணத்தில் திருமுறைத் தலங்களின் திருப்பணிகள் பல செய்த நகரத்தார் சமூகத்தினரின் பண்டைய வரலாறும், திருப்பணிகளின் சிறப்பும் கூறப்படுகிறது. மக்கள் நல்வாழ்வு பெறுவதற்கு இறையருள் அவசியம் என்பதையும் இடுக்கண் களைவதற்கும், ஆணவத்தை அகற்றுவதற்கும், இறை வழிபாடு அவசியம் என்பதையும், உணர்ந்து வருந்தி இறைவனை வழிபட்டால் பாவங்களை இறைவன் மன்னிப்பார் என்பதையும் வயிரவன் கோயில் புராணம் வலியுறுத்துகிறது.
பாயிரத்திலுள்ள இறைவணக்கப் பாடல்களும் இந்திரன், ததீசி முனிவர், சுக்கிரன், தேவர்கள் முதலியோர் வளரொளிநாதரையும், வயிரவமூர்த்தியையும், கற்பக விநாயகரையும் துதிக்கும் பாடல்களும் உள்ளத்தை உருக்குபவை. இப்புராணத்தை எளிய உரைநடையில் சுருக்கி ஆக்கித்தருமாறு திருவண்ணாமலை ஆதினப் புலவர், பண்டித வித்வான் மு. முத்துவேங்கடாசலம் அவர்களை வேண்டிக் கொண்டேன். அவர்களும் தம் முதிர்ந்த வயதிலும் இப்பணியைச் செவ்வனே செய்து அதை வெளியிடுவதில் யுக்தானுசாரமாகக் கூட்டியோ, குறைத்தோ செய்து கொள்வதற்கு அன்புடன் எனக்கு அனுமதி அளித்தார்கள். அவர்கள் பண்டிதமணி மு.கதிரேசன் செட்டியார் அவர்களின் நெருங்கிய நண்பரும் ஆவார்கள். அன்னாருக்கு அருள்மிகு மார்த்தாண்ட வைரவர் அருளால் 19.3.95 அன்று காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் புதுக்கோட்டை முகாமில் அவருடைய ஞான தானப் பணியைப் பாராட்டிப் பொன்னாடை அணிவித்துச் சிறப்பித்துள்ளார்கள்.

வயிரவன் கோயிற் புராணம் மொத்தம் 17 படலங்களைக் கொண்டதாகும். மொத்தம் 1152 செய்யுட்கள் உள்ளன. அவற்றுள் நாட்டுப் படலம், நகரப் படலம், நைமிசப் படலம், புராண வரலாற்றுப் படலம், தலவிசேடப் படலம், தீர்த்த விசேடப் படலம் ஆகியவற்றைத் தவிர்த்தும், பாயிரத்தைச் செய்யுள் வடிவத்திலேயே கொடுத்தும், எஞ்சிய பத்துப் படலங்களுக்கு எளிய உரைநடைச் சுருக்கம் தரப்பட்டுள்ளது.
வயிரவன் கோயில் தலம் கீழ்க் கண்ட பெயர்களில் இப்புராணத்தில் குறிக்கப்படுகிறது: - வடுகநாதபுரி, வடுகநாதபுரம், வடுகன் மூதூர், வயிரவ நகர், வயிரவ மாபுரம்.
அரக்கர்களால் ஏற்பட்ட துன்பத்தினின்று மீள்வதற்காகத் தேவர்கள் வளரொளிநாதரிடம் அடைக்கலம் புகுந்தனர். அவர்களைக் காப்பாற்ற இறைவன் வயிரவக் கோலம் பூண்டார். கற்பக விநாயகர் தலைமையில் அரக்கர்களை சம்ஹாரம் செய்து, இறுதியில் வயிரவமூர்த்தி அரக்கர் தலைவனை அழித்துத் தேவர்களைக் காப்பாற்றினார். இந்திரன், ததீசிமுனிவர், சந்திரன், சுக்கிரன் முதலியோர் இத்தலத்தில் பூசனை செய்து பாவம் நீங்கினர். புராண நிறைவில் கிரிகரப் படலத்தில் நகரத்தார் வரலாறும், ஒன்பது நகரக் கோயில்கள் ஏற்பட்ட விவரமும் கூறப்படுகிறது. மேலும் இளையாற்றங்குடி, பிள்ளையார்பட்டி ஆகிய தலங்களின் பெருமையும் கூறப்படுகிறது.
சிவபுராணத்தைக் கேட்பதாலும், படிப்பதாலும், உயிர்கள் சிவகதி அடையும் என்று ஆன்றோர்கள் கூறுகிறார்கள்.
“திருத்தகு சிவபுராண சிரவண விசேடத்தாலே
உருத்தகு பாவம் நீங்கும் புண்ணியம் ஒருங்குமேவும்
மருத்தகு பத்தி வாய்க்கும் மாதேவன் அருள் உண்டாகும்
கருத்தகு தீமையெல்லாம் கழன்று மேற்கதி உண்டாமால் 
-காசி ரகசியம்
எனவே எல்லோரும் இப்பயன்களை அடைய வேண்டும் என்ற கருத்தில் இந்நூலை வெளியிடுகின்றேன்.
வயிரவன்பட்டித் தலச் சிறப்பு
நகர வயிரவன்பட்டித் தலம் காரைக்குடி – திருப்பத்தூர் நெடுஞ்சாலையில் பிள்ளையார்பட்டியை அடுத்து அழகிய இயற்கைச் சூழலில் அமைந்துள்ளது. சோழ அரசனால் ஏற்பட்ட இடையூறுகள் காரணமாகச் சோழ நாட்டிலிருந்து தென்பாண்டி நாட்டிற்கு வந்த நகரத்தார் சமூகத்தினருக்கு கி.பி. 718ல் ஒன்பது நகரக்கோயில்கள் ஏற்பட்டன. இவ்வொன்பது சிவாலயங்களுள் வடிவுடையம்மை உடனாய வளரொளிநாதர் திருக்கோயிலும் ஒன்றாகும்.


“விரித்த பல் கதிர்கொள் சூலும் வெடிபடு தமருகங்கை
தரித்ததோர் கோலகால பைரவனாகி வேழம்
உரித்து உமை அஞ்சக்கண்டு ஒண்டிரு மணிவாய் விள்ளச்
சிரித்தருள் செய்தார் சேறைச் செந்நெறிச் செல்வனாரே
என்று அப்பர் சுவாமிகள் போற்றிய வயிரவநாதர் இத்தலத்தில் சிறப்பாக விளங்குகிறார்.
“நஞ்சினை உண்டிருள் கண்டர் பண்டு அந்தகனைச் செற்ற
வெஞ்சின மூவிலைச் சூலத்தர் வீழி மிழலையார்
அஞ்சனக் கண்ணுமை பங்கினர் கங்கையங்காடிய
மஞ்சனக் செஞ்சடையார் என வல்வினை மாயுமே.
என்னும் சம்பந்தர் பாடல் வயிரவரைக் குறிப்பிடுவதாகக் கூறப்படுகிறது.
வயிரவர் சிவ மூர்த்தங்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார். க்ஷேத்திரங்களைக் காக்கின்றமையால் க்ஷேத்திரபாலகர் எனவும் அழைக்கப்படுகிறார். நான்மறைகளே நாய் வடிவுடன் வயிரவருக்கு வாகனமாக விளங்குகின்றன. பிரம்மனின் அகந்தையை வயிரவர் அடக்கினார் என்பது கந்த புராணம்.
திருப்பத்தூரில் உள்ள பைரவர்கோயில் வைரவருக்குச் சிரசுஸ்தானமாகவும், வயிரவன்பட்டியில் உள்ள வயிரவர் கோயில் இதயஸ்தானமாகவும் இலுப்பைக்குடியிலுள்ள வைரவர்கோயில் பாதஸ்தானமாகவும் விளங்குகின்றன.
வயிரவன்பட்டியில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் சஷ்டியன்று சம்பாசஷ்டி விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அன்று வயிரவமூர்த்தி அரக்கனை சம்ஹாரம் செய்கிறார். சம்ஹார சஷ்டி விழா என்பது தற்சமயம் சம்பாசஷ்டி விழா என்று அழைக்கப்படுகிறது.
சிற்பங்களின் சிறப்பு
வயிரவன் கோயிலில் காணப்படும் சிற்பங்கள் நகரத்தார்களின் தெய்வத் திருப்பணிகளின் மகுடமாகத் திகழ்கின்றன. இக்கோயிலின் கருங்கல் திருப்பணி கி.பி. 1864ம் ஆண்டில் நகரத்தார்களால் துவங்கப்பட்டு, கி.பி. 1894ம் ஆண்டு சிறந்த சிற்ப வேலைப்பாடுகளுடன் நிறைவேறியது. நாற்பது ஆண்டுகாலம் வயிரவன்பட்டியிலேயே தங்கி இருந்து, வயிரவன் கோயிலைச் சிறப்பாகக் கட்டி முடிப்பதற்கு உறுதுணையாக இருந்த பெருமை தெய்வநாயக வகுப்பைச் சேர்ந்த கண்டனூர் அ.நா. குடும்பத்தினரான திரு. நா.அ.ராம. இராமசாமி செட்டியார் அவர்களைச் சாரும்.
சண்டீசுவரர் எழுந்தருளியுள்ள தனிக்கோயில் ஒரே கல்லினால் ஆனது. சுமார் 20 டன் எடையுள்ள கல்லை குன்றக்குடி – தருப்பத்தூர் நெடுஞ்சாலைக்குத் தெற்கேயுள்ள மலையிலிருந்து ஒரே கல்லாக வெட்டி எடுத்து வந்து குடைந்து அதில் சண்டீசுவரரை எழுந்தருளச் செய்திருக்கிறார்கள். அந்தக்கல் எடுக்கப்பட்ட இடத்தில் ஏற்பட்ட பள்ளத்திற்குச் சண்டீஸ்வரர் மலைப்பள்ளம் என்று பெயர்.
சண்டீஸ்வரர் சந்நிதிக்குக் கீழ்புறம் வளரொளிநாதரின் திருமாளிகை வடக்குச் சுவரில் ராமபிரான் ஆஞ்சநேயருக்கு முன்பாகக் கைகூப்பி நிற்கும் கோலத்தில் காணப்படுகிறார். இது ஒரு அரிய அழகிய சிற்பம்.
நடராசர் சன்னிதியில் காணப்படும் இரண்டு குதிரை வீரர் சிற்பங்கள் அற்புதமானவை. குதிரை வீர்ர் சிற்பத்துக்கு வடக்கில் கண்ணப்பர் சிற்பம் கண்கொள்ளாக் காட்சியாகும்.
வயிரவர் சிற்பம் வனப்பு மிக்கதாகும். வயிரவர் பத்மபீடத்தில் நின்ற திருக்கோலத்தில் காணப்படுகிறார். அக்கினி கேசத் தலைக்கோலமும், ஆபரணங்கள் நிறைந்த மார்பும் காணப்படுகின்றன. நான்கு கரங்களில் உடுக்கை, பாம்பு, சூலம், கபாலம் ஆகியவற்றை ஏந்தியுள்ளார். வயிரவருக்குப் பின்புறம் அவரது வாகனமான நாய் நின்ற நிலையில் காணப்படுகிறது.
வயிரவன் கோயில் விமானங்களிலும், மண்டப விமானங்களிலும் மொத்தம் 1416 சுதைச் சிற்பங்கள் உள்ளன. இவை மிகுந்த கலை அழகு உடையவை.
வயிரவன் கோயிலில் உள்ள முதல் திருச்சுற்றில் வடகிழக்குக் கூரையில் வயிரவன் கோயில் தலபுராணத் தொடர்பான ஓவியங்கள் காணப்படுகின்றன. தென்கிழக்குக் கூரையில் இராமாயணக் காட்சிகள் ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளன. இவை மிகுந்த கலை நுணுக்கம் கொண்டவை.
வயிரவன் கோயிலின் சிற்பங்களைப் பற்றியும் ஓவியங்களைப் பற்றியும் விவரமாகத் தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் டாக்டர் வ. தேனப்பன் அவர்கள் மிக நுணுக்கமாக ஆராய்ச்சி செய்து வெளியிட்டிருக்கும் ‘ஒன்பது நகரக்கோயில்கள்’ என்ற நூலைப் படிக்க வேண்டுகிறேன் (தேவக்கோட்டை தேன்வள்ளியம்மை பதிப்பக வெளியீடு).
நகரவயிரவன்பட்டியின் தலச்சிறப்பை அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தின் காரணமாக இச்சிறு நூலை வெளியிடுகிறேன். முன்னுரையில் வயிரவன் கோயிலைப் பற்றிய சிறப்பை நான் எழுதுவதற்குப் பெரிதும் எனக்குத் துணைபுரிந்தவை 1982ம் ஆண்டு நகர வயிரவன் கோயில் திருக்குட நன்னீராட்டு விழாச் சிறப்பு மலரில் வெளிவந்த டாக்டர் சுப. அண்ணாமலை அவர்களின் கட்டுரையும், ராயவரம் உயர்திரு. ப.வ. ராம. குழந்தையன் செட்டியார் அவர்களின் கட்டுரையும், டாக்டர் வ.தேனப்பன் அவர்கள் எழுதிய சிறந்த ஆராய்ச்சி நூலான ‘ஒன்பது நகரக் கோயில்கள்’ என்ற நூலும் ஆகும். மேற்கண்ட பெரியோர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எனது இந்தச் சிறிய நூல் வெளியீட்டுப் பணியில் என்னை ஊக்குவிக்குமாறு வயிரவ நாதரின் பக்தகோடிப் பெருமக்களையும், தமிழன்பர்களையும், பணிவுடன் வேண்டுகிறேன்.


No comments:

Post a Comment