Tuesday, August 31, 2010

பஞ்சம் பிழைக்கிற மாதிரி நடிக்க வந்தேன் – ராஜ்கிரண் நேர்காணல் -மு.ராமசாமி

டிகர், இயக்குநர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர் என்று திரையுலகில் பன்முகமாய் முகங்காட்டி, இடையில் எதுவாகவும் இல்லாமலிருந்து இப்பொழுது ஒரு ஃபீனிக்ஸ் பறவையைப் போல புதுவேகத்துடன் ‘தவமாய்த் தவமிருந்து’ படத்தின் மூலம் தன்னை மிகப்பெரும் நடிகராக நிரூபித்திருப்பவர், ராஜ்கிரண். குருத்து, கீற்று, கிடுகு, மட்டை என்று பலப்பலவிதமாய் உருமாறி அததற்கான வாசனையைத் தந்து கொண்டிருக்கும் ஒரு தென்னையின் அழகுடன் இவரை இப்பொழுது மிளிர வைத்திருப்பவர் சேரன். ராஜ்கிரண் என்பதை எம்.ஜிஆர், சிவாஜி, எஸ்.வி.ரங்காராவ், எஸ்.வி.சுப்பையா ஆகிய நடிகர்களின் சமச்சீரான வேதியியல் சேர்க்கையில் உருவான நேர்த்திமிக்க இயல்பான ஒரு குழைவு என்பதாக அர்த்தப்படுத்திக் கொள்ளலாம். வாழ்வின் ஏற்ற இறக்கங்களுடன் கைகோர்த்து உச்சத்தையும் வீழ்ச்சியையும் ‘ஓடும் பொருளுமாய் ஒக்கப் பார்க்கும்’ ஆன்மிகப் பார்வையை அவருக்கு வழங்கியிருக்கிறது. தன் குடும்பம், தன் சுற்றம் எனும் வாழ்வியல் சூழலுக்குள் புதைந்து அதற்குள் மனம் மகிழ்ந்து நிற்பவர் ராஜ்கிரண். ‘தவமாய்த் தவமிருந்து’ படத்தின் மூலம் கும்பிடத் தோன்றும் ஓர் அப்பாவாய் அனைவர் மனதிற்குள்ளும் கதைகள் பேசிக்கொண்டிருப்பவர்.
சொந்தப் படம் எடுப்பதற்காகத் தன் சொந்த வீட்டை அடமானம் வைக்க அலைந்துக்கொண்டிருந்த அவரின் அலைச்சல்களின் ஊடே பக்ரீத் பெருநாளன்று அவருடைய வீட்டில் அவரைச் சந்தித்து வாழ்க்கை, நடிப்பு இரண்டுக்குமான கொள்வினை, கொடுப்பினைகளை அவர் வார்த்தைகளில் பகிர்ந்துகொள்ள எடுத்த முயற்சியே இப்பேட்டி. எம்.ஜி.ஆரைப் போல கன்னம் குழிவிழும் சிரிப்புடன் பேட்டிக்குத் தயாரான அவரிடம் இயல்பைத் தவிர எந்தப் பந்தாவும் இல்லை.
அவர் மகன் திப்புசுல்தான், தன் தந்தையுடனான தன்னுடைய நேரத்தைப் பங்கிட்டுக் கொள்ள வந்திருந்த எனக்கு, அவர் ஒதுக்கிக் கொடுத்த கொஞ்ச நேரத்திற்குள் இந்தப் பேட்டியை முடிக்க வேண்டியதாகிவிட்டது. அதுவும் ரசிக்கக்கூடிய அழகாய்த்தானிருக்கிறது. ராஜ்கிரண் என்கிற இந்தப் பெரிய நடிகரின் சூட்சுமம் அவரின் மகன் திப்புசுல்தான் கையில்தான் இருக்கிறது என்பதையே இந்தப் பேட்டியும் உறுதி செய்கிறது. அவரின் இயல்புமிகு நடிப்பு, செயற்கை களைந்த பழகுமுறை – இவற்றைப்போலவே இருக்கிற அவரின் இயல்பான பேச்சுமொழியில் இந்தப் பேட்டி அமைந்துபோனது இயல்பானதே.
‘என் ராசாவின் மனசிலே’ படத்தில்தான் முதல் முறையாக நாங்க உங்களைப் பார்க்கிறோம்... அதுக்கு முன்னாடி பார்த்துகிட்டிருந்த நடிப்பு, நடிகர்களிலிருந்து மாறுபட்ட ஒரு நடிகரோட நடிப்பைப் பார்த்ததுங்கற மாதிரி மனசுக்குள்ள ஒரு குறுகுறுப்பு இருந்தது. அதுக்கப்புறம் ஒரு பெரிய வீச்சு உங்களுக்கு ‘நந்தாவுல கெடச்சுது. சிவாஜியைத் தாண்டி பிரமாதப்படுத்தி விடுகிற ஆள் இன்னொருத்தர் நம்மகிட்ட இருக்காரு அப்படீங்கறமாதிரி பெரிய பிரமிப்பை அது கொடுத்தது. இப்ப ‘தவமாய்த் தவமிருந்து’. இதுக்கொரு வரைபடம் போட்டா... அசாதாரணமான சிகரத்தை மிகச் சாதாரணமாய்த் தொட்டுவிட்ட மாதிரி ஆச்சர்யப்படுத்துகிறது. இவைகளுக்கான உங்களின் தயாரிப்பு எப்படீங்கறதைச் சொல்ல முடியுமா? 
நான் நடிக்கணும்னு ஆர்வப்பட்டு ஆசைப்பட்டு நடிப்புக்கு வரல. அதுல பெரிய ஈடுபாடெல்லாம் கிடையாது. பொழப்பைத் தேடி வந்த எடத்துல சினிமாத் தொழிலுக்கு வர்ற மாதிரி சந்தர்ப்பங்கள் அமைஞ்சது. வந்துட்டேன். சினிமாங்கறது மிகச் சக்தி வாய்ந்த ஒரு மக்கள் ஊடகம். நான் தயாரிப்பாளனா ஆகும்போது, இதன் மூலமா சமுதாயத்துக்கு ஏதாவது நல்லதே செய்யணும்னு நெனச்சேன். ஒரு தொழில் செய்யறோம்...  பணத்துக்காக, லாபத்துக்காக. ஆனா இந்தத் தொழில்ல பணம், லாபங்கறது மட்டும் இல்லாம பேரும் புகழும் வேற கெடைக்குது. இப்படிப்பட்ட தொழிலை நமக்கு இறைவன் குடுத்திருக்கான். அதனால், நான் தயாரிப்பாளனா, நடிகனா, இயக்குநரா... என்னுடைய மூணு படங்களிலும் சமுதாயத்துக்கு வேண்டிய நல்ல கருத்துக்களைச் சொல்லியிருக்கேன். என்னுடைய நோக்கம் நடிக்கணும், நடிப்புல திறமையைக் காட்டணும் அப்படீங்கறதெல்லாம் இல்ல. அடிப்படையா அதில் ஆர்வம் இல்லாததுனால அதுக்கான பயிற்சிகள் எதுவும் எடுத்துக்கல. சொந்தப்படம் பண்ணும்போது மனசுல தோணுனதைச் செஞ்சோம்... ‘ஒரு குடிகாரனால குடும்பம் நடத்தத் தெரியாது’ இந்தக் கருத்தைக் கொண்டுபோய் ஜனங்கள்ட்ட சேர்க்கணும்... அதுக்காக ‘என் ராசாவின் மனசிலே’ பண்ணுனோம். அப்ப... கதையை உருவாக்கும்பொழுதும், திரைக்கதையை உருவாக்கும் போதும்... வசனங்களை எழுதும்போதும் நம்ம மனசுக்குள்ள ஊறிப்போன விசயங்கள் இருக்குதில்ல... என்ன சொல்ல நினைக்கிறோம் ஜனங்களுக்குன்னு... அது மனசுல ஊறிப்போச்சு. அதை இப்படிச் சொல்லணும்னு நாம பண்ணுனோம். அந்த நடிப்புப் பாராட்டப்பட்டது.
 
இப்ப ‘நந்தா’வ எடுத்துக்கிட்டா நான் ஒரு மாணவன் மாதிரிப் போய் நின்னேன், இயக்குநர் பாலா முன்னாடி.! சின்னச் சின்ன விசயங்களும் எனக்குக் கத்துக் குடுத்தாரு பாலா. இதை இப்படிச் செய்யணும். இதை இன்னயின்ன மாதிரிப் பண்ணனும்... இந்தக் காட்சியை இப்படித்தான் பார்க்கணும்... இப்படித்தான் பேசணும்... அசைவுகள் இப்படி இருக்கணும்... இப்படி ஒவ்வொன்னையும் சொல்லிக் கொடுத்தாரு. அங்க என்னுடைய நடிப்புத் திறமைக்கு வேலையே இல்ல. அவர் என்ன சொன்னாரோ அதை அப்படியே உள்வாங்கிட்டேன். அவர்கள் எதிர்பார்த்ததைச் செய்தேன். ஆக, முழுக்க முழுக்க ‘நந்தா’ படத்துல என்னுடைய வீச்சு நல்லாயிருந்ததுன்னு சொன்னீங்களே... அதற்குக் காரணம் பாலாதான்.
அடுத்தது, இப்ப ‘தவமாய்த் தவமிருந்து’ல மூணு சாதகமான விஷயங்கள் எனக்கு. முதல் விஷயம், சேரன்... திரைப் பிரதியைக் கையில கொடுத்திடுவாரு படப்பிடிப்புக்கு முன்னாடி. ஆக, முழுப் பிரதியும் கையில் கிடைச்சிடறதுனால, முழுக்கதை, முழுத் திரைக்கதை, வசனங்கள், எல்லாக் கதாபாத்திரங்களைப் பத்தியும் நாம தெரிஞ்சுக்கிறதுக்கு வாய்ப்பு இருக்கு. அடுத்தது, படப்பிடிப்புக்கு வர்ற அன்னிக்கி, எடுக்கப்போற காட்சியைப் பத்தி விளக்கிச் சொல்வாரு. நம்மகிட்ட ஏற்கெனவே பிரதி இருக்கு. இருந்தும் அன்னைக்கும் விளக்கிச் சொல்வாரு.
அண்ணே இந்தக் காட்சியைப் பண்ணப் போறோம். இதுக்கு முந்தின காட்சி இது... பிந்திய காட்சி இது... இப்ப ஒங்க கதாபாத்திரத்தினுடைய மனநிலைமை இது... இதை விளக்கிச் சொல்லிடுவாரு. இது ரெண்டாவது விஷயம். மூணாவது விஷயம், நடிச்சும் காட்டுவாரு.. இதை இப்படிப் பண்ணனும். இப்படிச் செய்யணும். இப்படி வரணும்னு நடிச்சும் காட்டுவாரு. ஆக, அவர் நம்ம மனசுல என்ன ஏத்தினாரோ அதை அப்படியே திரும்பப் பண்றோம். இதுல நமக்கு ஒண்ணும் வேலை இல்ல (சிரிக்கிறார்).
அப்படியே சொன்னதைத் திரும்பச் செய்யறேன்... இதுதான். அதனால ந..டி..ப்..புல நான் பெருசா ஏதோ பண்ணுனேங்கறதெல்லாம், மனசைத் தொறந்து சொன்னா... எனக்கு அந்தப் பெருமைகளை ஏத்துக்க முடியல. பாலா என்ன சொன்னாரோ அதைச் செஞ்சேன். ‘நந்தா’வுல. இதுல சேரன் என்ன சொன்னாரோ எதைப் பண்ணிக் காட்டினாரோ... என்ன நடிச்சிக் காட்டுனாரோ... அதைச் செஞ்சேன். அவ்வளவுதான்.

தன்னடக்கம்னு அதை ஏற்றுக்கொள்ளலாம். ஆனா பாலா, சேரன் இவர்கள் மீதுள்ள மரியாதை காரணமா நான் சொல்றேன் ‘உங்ககிட்டயிருந்துதான் இதைப் பெற முடியுங்கற நம்பிக்கையிலதான் அவுங்க இன்னொருத்தரைத் தேர்ந்தெடுக்காம உங்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள். ‘நந்தா’ செய்யும்போதும், இப்போ ‘தவமாய்த் தவமிருந்து செய்யும்போதும் நீங்க நிறைய படங்கள் பண்ணி உச்சத்தில் இல்ல. நீங்க நடிச்சாதான் இந்தப் படத்தைப் பண்ணுவேன்னு சேரன் சொன்னதா நீங்களேகூட ஒரு பேட்டியிலே சொல்லியிருக்கீங்க. அப்ப உங்ககிட்ட வேறு ஏதோ ஒண்ணு இருக்குது. அந்த ஒண்ணு என்னங்கறதுதான் நான் உங்ககிட்ட கேட்குறது? 
அது முழுக்க முழுக்க இறைவனுடைய அருளாகத்தானிருக்கணும். இயக்குநர் எங்கிட்ட என்ன எதிர்பார்க்கிறாரோ அதை அப்படியே திருப்பிக் குடுக்கறதுங்கற ஒரு விஷயம்... இல்லையா? அதை நான் என்னவா நினைக்கிறேன்னா அது இறைவனுடைய அருள். எனக்கு குருநாதர் ஒருத்தர் கெடச்சிருக்காங்க. ஷையத் பாவான்னு. ஆன்மிகத்துல எனக்கு குருவா கெடச்சவங்க. நாளாவட்டத்துல என்மேல் பாசம் வச்சி என்னை மகனாகவே தத்தெடுத்துக்கிட்டாங்க. அதுக்கு முந்தி அவுங்களுக்குச் சொந்தம் பந்தம் வாழ்க்கைன்னு எதுவும் கிடையாது. பிரமச்சாரி. அவருக்கு என்று ஒரு இடம் கிடையாது. பற்றற்றிருந்த ஞானி. நான் சிஷ்யனா ஆனதுக்கப்புறம் அவருக்குள்ள ஏதோ பாசம் ஏற்பட்டு என்னைத் தத்தெடுத்துக்கிட்டாரு. நான் நல்லா வரணும்னு அவர் எனக்காக இறைவன்கிட்ட செய்த பிரார்த்தனைகள்.
என் மனைவி ஹரிஜா நாச்சியார் ஐந்து வேளைத் தொழுகும்... எனக்காக இறைவன்கிட்ட செய்த பிரார்த்தனைகள். என் மகன் திப்புசுல்தான், மாமன்னர் திப்புசுல்தான் பற்றி பிரிட்டிஷ்காரனுக்குச் சிம்ம சொப்பனமா வாழ்ந்தவர்ங்கறது மட்டும்தான் சரித்திரத்துல தெரியுது. அதை மீறி, அவர் மிகப்பெரிய ஞானி. ஆன்மிகவாதி. இஸ்லாமிய ஆன்மிகவாதி. ஏன்னா இஸ்லாமியர்கள்லேயே என்ன இஸ்லாம்... இஸ்லாம் என்ன சொல்லுதுன்னு தெரியாதவங்க நிறையப் பேர் இருக்காங்க. ஆனா இஸ்லாம் என்ன சொல்லுதுன்னு உண்மையாத் தெரிஞ்சவர்தான் ஆன்மிகவாதியா இருக்க முடியும். திப்புசுல்தான் அப்படிப்பட்டவர். அவருடைய அனுக்கிரகத்தினாலதான் எனக்குக் கொழந்தை பொறந்திச்சி. அதனால் அவரு பேரு எம் மகனுக்கு வச்சிருக்கேன். இப்படி என் மகன் திப்புசுல்தான் என் மேல காட்டுகிற அன்பு, பாசம், பரிவு.. அதாவது நான் அவரைப் பெத்திருக்கேன். ஆனா அவரு என்னையப் பெத்த மாதிரி நெனச்சிக்கிட்டு... இந்த நாலு வயசில... (சிரிக்கிறார்) நான் சாப்பிட்டுக்கிட்டிருந்தா... எனக்கு வேர்க்குது என்று தொடச்சி விடுறாரு. அவரு ‘இன்னும் கீரை, காய்கறி, அது இதுன்னு சாப்பிட்டுப் பழகல. வெறும் ஜூனியர் ஹார்லிக்ஸ், ஜூஸ், பிஸ்கட், வெறும் சாதம், நெய்ச்சாதம்தான் சாப்பிட்டுக்கிட்டிருக்காரு. என் தட்டுல கறியை எடுத்து வச்சி, நல்லாருக்கு சாப்பிடு... சாப்பிடு... டேஸ்டா இருக்கு. சூப்பர்... இப்படிக் காட்டுகிற பாசங்கள். இப்படி ஒரு மனிதனுக்கு மனதுக்கு அமைதியும், நிறைவும், சந்தோஷமும் கிடைச்சா அவனுக்குள்ளிருந்து பல சக்திகள் வெளிப்படும். ஆக, எனக்கு அப்படியொரு வாழ்க்கை கெடச்சிருக்கு.
என் தகப்பனாராகிய குருநாதர், என் மனைவியுடைய ஐந்து வேளைத் தொழுகை, என்னுடைய மகன், என்னுடைய வளர்ப்பு மகள் ப்ரியா... ஆஞ்சநேயர் பக்தை... எப்பப் பார்த்தாலும் கையில மாலை வச்சிக்கிட்டு ஜெபம் பண்ணிக்கிட்டேதான் இருக்கும். ஆக, இப்படி நல்ல சக்திகள், நல்ல மன அதிர்வுகள் என்னையச் சுத்தி இருக்கிறது. இயக்குநர் என்னிடம் எதிர்பார்க்கிற விசயங்களைக் கொண்டுவரதுக்கு உதவுதுன்னு நினைக்கிறேன். என்னுடைய அறிவுக்கு அதுதான்னு தோணுது.

நான் உங்களை, ‘நந்தாவிலும் ‘சண்டக்கோழியிலும் ரொம்ப நெருக்கமாயில்லாட்டியும் பக்கத்திலிருந்து பார்க்கக்கூடிய வாய்ப்பு எனக்குக் கெடச்சிது. நீங்க நடிக்கறதுக்காக அதிகச் சிரமம் எடுத்துக்கொள்ற மாதிரி எனக்குத் தெரியலை. சொல்றதைக் கேட்டுட்டு சின்னச் சின்ன அசைவுகள்ல பெரிய உணர்ச்சிகளைக் காட்டுறதுங்கறது எனக்குப் புடிச்சிருக்குது. 
நான் முன்னமே சொன்ன மாதிரி என்னைச் சுத்தியிருக்கிறவுங்களுடைய பிரார்த்தனைகளும், இறைவன் அருளும் எனக்குக் கெடச்சிருக்கிறதுனால மனசு நிர்மலமாயிருக்கு. மனசு நிர்மலமாயிருக்கும்போது... இப்ப ஒரு இயக்குநர் சொல்றாரு... இந்தக் கதாபாத்திரம் இந்த மனநிலையில இருக்கு. இந்த மாதிரி உணர்றாருன்னு சொல்றாரு. அதை நான் மனசுல உள்வாங்கிக்கிறேன். அவரு சொல்றதை உணர ஆரம்பிச்சுடுறேன். இப்படியிப்படி உணர்றான்.. இப்படி நெனைக்கிறான்.. இப்படி பீல் பண்ணுறான்னு அவுங்க சொல்லிக் காட்டிக்கிட்டிருக்காங்க. சொல்லச் சொல்ல என் மனசுக்குள்ள அதை நான் உணர ஆரம்பிச்சுடுறேன். ஆரம்பிச்சிட்டுச் செய்யும்போது அது சரியா வந்திருது போலயிருக்கு.
உங்க நடிப்பின் சிறப்பு அது மிகை இல்லாம இயல்பாக அமைஞ்சிருக்கறதுதான். அதற்கு நடிப்பில் முன்மாதிரியா நீங்க யாரையும் வச்சிருக்கீங்களா? 
அடிப்படையா நான் ரொம்ப கூச்ச சுபாவம் உள்ளவன். நடிகனா வந்ததே எதிர்பாராத ஒண்ணுதான். நான் சின்ன வயசில. எம்.ஜி.ஆர் ரசிகன். ஆனா படங்கள் பார்க்கிறது ரொம்பக் குறைவு. இதுவரைக்கும் பார்த்தீங்கன்னா.. நான் எம்.ஜி.ஆர் ரசிகனாயிருந்தாலும் அவருடைய படங்கள்ல மிகப்பெரும் வெற்றி பெற்ற படங்கள் மட்டும்தான் பார்த்திருக்கேன். ‘மன்னாதி மன்னன்’, ‘நாடோடி மன்னன்’, ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘காவல்காரன்’... இப்படிக் குறிப்பிட்டு 10 படங்கள்தான் பார்த்திருக்கேன். எப்பப் பார்த்தாலும் அந்தப் படங்களப் பார்த்து ரசிப்பேன். அதுமாதிரி சிவாஜி சார் படங்கள்னா... அப்ப எம்.ஜி.ஆர் ரசிகனா இருந்ததுனால சிவாஜி சாரைப் புடிக்காது (சிரிக்கிறார்). அவர் நடிச்சி நான் பார்த்த படங்கள்னா ‘நவராத்திரி’... அதை எப்பப் போட்டாலும் ரசிச்சுப் பார்ப்பேன். ‘திருவிளையாடல்’, ‘தில்லானா மோகனாம்பாள்’ இப்படியொரு ஐந்து படங்கள்தானிருக்கும், சிவாஜி படங்கள்ல நான் பார்த்தது. எப்பச் சந்தர்ப்பம் கெடச்சாலும் பார்த்திருக்கேன். மனசுக்குள் லயிச்சிப் போச்சு. மற்றபடி சினிமாவில் ஈடுபாடு... அதிகமாப் பார்க்கணும்ங்கற மாதிரி ஏற்பட்டதில்ல. அதுக்கு ஆரம்பக் காலத்துல எனக்கு ஏற்பட்ட வறுமையும் காரணமாயிருக்கலாம். காசு குடுத்து சினிமா பார்க்குற அளவுக்கு வசதியில்லாத வறுமையும் காரணமாயிருந்திருக்கலாம். அதுக்கடுத்து, பொழப்பு தேடி 16 வயசுல சென்னைக்கு வந்தாச்சி. என் வாழ்க்கையோட போராடிக்கிட்டிருந்ததுனால, நமக்குன்னு பொழுதுபோக்குகள்... அப்படியிப்படின்னு எதுக்கும் வாய்ப்பு வராததுனால... படங்கள் எதுவும் பார்க்க முடியாமப் போயிருக்கலாம்.
விநியோகஸ்தரா ஆன பிற்பாடு நிறை பார்த்திருப்பீங்கள்ல? 
அப்பவும் எனக்குன்னு பொழுதுபோக்குக்காக நான் போய்ப் படம் பார்க்கிறதில்லை. அதாவது ஒரு தொழில்ல இருந்தா அதுல முழுக்க முழுக்க ஈடுபாட்டோடு இருக்கணும். விநியோகஸ்தர்னா அது சம்பந்தப்பட்ட விஷயங்கள்லயே மூழ்கியிருக்கணும். அப்ப எனக்கு இந்த வெளிவட்டாரப் பழக்கவழக்கங்கள் கெடையாது. நாலு எடத்துக்குப் போறது... பார்க்குக்குப் போறது... சினிமாப் பாக்கறது அது மாதிரி விசயங்கள் கிடையாது. அந்தத் தொழிலுக்கே அர்ப்பணித்து அதிலேயே கெடக்கிறது. இப்படி... அதனால சினிமா பார்க்கிறதும் கம்மி. அதனால நமக்கு எந்த நடிகர் மேலயும் ஒரு ஈடுபாடு... இந்த மாதிரி நாம நடிக்கணும்... அப்படீங்கற மாதிரி எண்ணமும் கெடையாது. ஏன்னா எம்.ஜி.ஆர் ரசிகன். எம்.ஜி.ஆர். படமே 10 படம்தான் பார்த்திருப்பேன். அதைவிட மனசு நிர்மலமாயிருக்கு. இயக்குநர்கள் சொல்றாங்க, அவுங்க எந்த அளவு என் மனசுக்குள்ள ஏத்துறாங்களோ அந்த அளவு அப்படியே வெளியே வந்திருது.
தியானம் எதுவும் செய்யறதுண்டா நீங்கள்? 
ஐந்து வேளை தொழுகிறேன். தொழுகையே தியானம்தான்.

தொழுகை உங்களுக்கு கருத்தூன்றும் மன ஒருமையைக் குடுக்குதுங்றீங்களா? 
மன ஒருமைங்கிறதைவிட மனசில குழப்பங்கள், பயங்கள் இல்லாமலிருப்பது... வாழ்க்கையைப் பத்திய பயமோ குழப்பங்களோ இல்லாம... நம்ம கையில ஒண்ணுமில்ல. எல்லாம் இறைவன் இயக்குறபடி நடக்குது, எதுக்கு நாம போய்க் கவலப்பட்டுக்கிட்டு, கஷ்டப்பட்டுக்கிட்டு, குழப்பிக்கிட்டு, மனச நொந்துகிட்டுக் கிடக்கணும்? ஒண்ணும் தேவையில்லை.
என் குருநாதர் ஷையத் பாவா சொல்லுவாங்க: ‘நீ எத்தனவாட்டி உன் வாழ்நாள்ல சுவாசிக்கணும்; எத்தனவாட்டி உன் கண்களை மூடணும்; என்னென்னெல்லாம் உன் வாயால சாப்பிடணும்; என்னென்னவெல்லாம் உன் காதால கேட்கணும்; என்னென்னெல்லாம் நீ பண்ணனும்... எல்லாமே இறைவன் விதிச்சது. இதுல நன்மைகள் வந்தா சந்தோஷப்படுவோம். தீமைகள் வந்தா வருத்தப்படுவோம். இந்தத் தீய விஷயங்களும் வரும்னு விதிக்கப்பட்டிருக்கில்லையா. அதைப் பிரார்த்தனைகள் செய்றது மூலமா நீக்கிக்க முடியும். ஆக, நமக்கு என்று எல்லாம் முடிவாகிப் போச்சு. நம்மை யாரும் எதுவும் பண்ண முடியாது.

திரையுலகத்தில் எம்.ஜி.ஆராகணும், சிவாஜியாகணும்னு வந்து யாராகவும் ஆகமுடியாம அதுக்குள்ளேயே தத்தளிக்கிறவங்களும், அதிலிருந்து மீண்டு கமல், ரஜினின்னு அடையாளப்படுத்திக்கிட்டவங்க ஒவ்வொரு காலத்துலயும் உண்டு. உங்களுக்கு இதுமாதிரி எந்தச் சிந்தனையுமில்ல. நாடக அனுபவமோ, நாடக ஈடுபாடோ எதுவுமில்ல. உங்க பாதையே தனியாயிருக்குது. இந்தச் சூழல்ல நீங்க நடிக்க வரவேண்டிய அவசியம் என்ன வந்தது? 
விநியோகஸ்தர் ஆனதுக்கப்புறம் தயாரிப்பாளரா மாறினேன். தயாரிப்பாளராயிருந்து ராமராஜனை வச்சி ரெண்டு படம் தயாரிச்சேன். ‘ராசாவே உன்னை நம்பி’... ‘என்னைப் பெத்த ராசா’... ரெண்டும் 100 நாள் படம். ஆனா எனக்கு நஷ்டம். என்னன்னா ஒரு பட்ஜெட் போட்ருவோம். அந்த பட்ஜெட்ல படத்தை முடிப்போங்கற நம்பிக்கையில வியாபாரம் பண்ணிடுவோம். மொதல்ல வியாபாரம் பண்ணீர்றதுனால படத்த முடிச்சுப் பார்த்தா செலவு கூடியிருக்கும். நம்ம பட்ஜெட்படி துண்டு விழுந்திருக்கும். வாங்குனவங்களுக்கெல்லாம் படம் வெற்றியாய்ப் போய் லாபம் கெடச்சிருக்கும். நமக்கு நஷ்டம்... இப்படி ரெண்டு படம் பண்ணினேன். மூணாவது படம் ராமராஜன வச்சி ஆரம்பிச்சேன். ஆரம்பிச்சிக் கொஞ்ச நாள்ல அவருடைய மார்க்கெட் சரிஞ்சு போச்சி. ஏற்கெனவே இரண்டு படங்கள்ல நஷ்டம், மூணாவது படத்துலயும் நஷ்டம். இதுகளையெல்லாம் சரிகட்டணும்.
இதுக்குத் திரும்பவும் படம் எடுத்தாதான் சரிக்கட்ட முடியும். படம் எடுக்கறதுக்குக் கதையைத் தேர்வு செய்தேன். ‘என் ராசாவின் மனசிலே’ கதை. அந்தக் கதையைத் தேர்வு பண்ணி அதை என்னுடைய ரசனைக்கு... அந்த முழுக்கதையை – முழுத் திரைக்கதையை மாத்திக்கொண்டு வர்றதுக்கு சரியா ஒரு வருஷம் தேவைப்பட்டது. அந்த ஒரு வருஷ காலகட்டத்துக்குள்ள அந்தக் கதையோட நான் ஒன்றிட்டேன்.
இப்ப... ரெண்டு படம்... மூணாவது படத்துலயும் நஷ்டப்பட்ட ஒரு சூழ்நிலை... பொழப்புக்காக நான் அடுத்த படம் பண்ணனும். அப்ப கஷ்டத்துலயிருந்த சூழ்நிலை. அப்ப அந்தச் சூழ்நிலையில் பிரபலமான நடிகர்கள்கிட்ட போயி இந்தக் கதையைச் சொன்னா யாரும் ஏத்துக்கப் போறதில்ல. ஒட்டுமொத்தப் படத்துக்குமே 800-850 ரூபாய்க்குதான் உடை, ஒப்பனைச் செலவு. அதுவும் காலைல எழுந்து பல் விளக்குறது சாராயத்னாலென்னா எந்த ஹீரோ நடிக்க வருவாங்க. வரமாட்டாங்க. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு படிமம் இருக்குல்ல. அதனால நம்மளே நடிப்போம்னு முடிவு பண்ணினோம். ஆக இது பஞ்சம் பொழைக்க வந்த மாதிரிதான்... நான் நடிக்க வந்தது. பஞ்சம் பொழைக்கறதுக்கு... ஊரை விட்டு ஊரு போவோம்ல அது மாதிரி. எதையோ ஒண்ணப் புடிச்சிக்கிட்டு வரணும். சரி... மத்த நடிகர்கள் அது இதுன்னு போனா நடிக்க மாட்டாங்கன்னு ஒரு விஷயம்... அப்படியிப்படின்னு போட்டாலும் அதுக்குப் பணம் நெறைய செலவாகும். இப்படிப் பிரச்சினைகள்லாம் இருக்கு. அதனால நம்மளே நடிச்சிருவோம் அப்படீன்னு முடிவெடுத்துதான் நடிக்க வந்தேன்.

அன்றைக்கு நடிகர் ராமராஜன் உச்சத்துலயிருக்கும்போதே அவர் நடிச்ச படம் மூலமா பணம் சரியா வரலேங்குறீங்க. நீங்க நடிக்க வரும்போது நீங்க புதுமுகம்தானே. எல்லாமே புதுமுகம்தான். அப்ப வியாபாரமாகும்கிறதே பிரச்சினைதான். எப்படி அது வெற்றிகரமா ஓடுங்கற நம்பிக்கை வந்தது? உங்கள்மீது எப்படி ஒரு தன்னம்பிக்கை... அதை நிறுத்தீர முடியும்னு வந்தது? 
என்னன்னா... நான் விநியோகஸ்தரா இருக்கும்போதிருந்தே என்னுடைய கணிப்புகள் சரியாயிருந்தது. நான் விநியோகஸ்தரா இருக்கும்பொழுது, கதை கேட்காமல் எந்தப் படத்தையும் வாங்கினதில்ல. புதுமுகங்கள் நடிச்ச படம். சின்ன நடிகர்கள் படங்கதான் வாங்குவேன். பெரிய நடிகர்கள் படங்கள்லாம் வாங்கமாட்டேன். ஏன்ன சின்ன நடிர்கள் படங்கள்தான் விலை கம்மியாயிருக்கும். அதை வாங்குவேன்... நம்ம கதை கேட்கணும்னா கதை சொல்லித்தான் தீரணும். ஆக, கதை சொல்வாங்க. கதை கேட்டு, இந்தக் கதை ஜெயிக்கும் அல்லது சின்னச் சின்னத் திருத்தம் பண்ணுனா இந்தக் கதை ஜெயிக்கும்... இப்படியெல்லாம் பண்ணும்போது முழுமையான திருப்தியாயிருந்தா சரின்னு சொல்லிடுவேன். சின்னச் சின்னத் திருத்தம் கொடுத்து, அதை அந்த இயக்குநரும் தயாரிப்பாளரும் முழுமையா ஏத்துக்கிட்டா அந்தப் படத்த வாங்குவேன். ஆக, இப்படி நம்முடைய கணிப்புகள் சரியா இருந்தன... விநியோகஸ்தரா இருந்த காலகட்டங்கள்ல தொடர்ந்து வெற்றிப் படங்கள் கொடுத்தேன். அந்தக் கணிப்புதான் நம்ம தயாரிப்புல நாமே நடிக்கலாங்கறதுக்கு உந்துசக்தியா இருந்தது. இந்தக் கதை ஜெயிக்கும். யார் நடிச்சாலும் ஜெயிக்கும்... யாரோ ஒருத்தரப் போடுறதுக்கு நாமே பண்ணப் போறோம்... அவ்வளவுதான். காசு மிச்சம். காசு மிச்சம்னா நம்மகிட்ட இருக்கறதுக்கு அவ்வளவுதான் செய்யமுடியும் அப்படீன்னு.

‘கிராமம், கிராம வாழ்க்கை, குடும்ப உறவு இவையெல்லாம் அப்படியே இயல்பாய்ப் பதிவாகி மண்வாசனையை நேர்த்தியா தந்த படம் ‘என் ராசாவின் மனசிலேன்னுஅப்ப பாரதிராஜா சொன்னதா நினைவு. நீங்க எடுத்த ராமராஜன் படங்கள் எதுலயும் இந்தத் தன்மை அப்படியே முழுமையா வரல. உங்க நடிப்பும் அதுக்குக் கூடுதலா உதவியிருக்கு. அப்படியொரு யதார்த்தமான நடிப்பு... 
பாரதிராஜா சார் என்மேல அளவு கடந்த பிரியம் வச்சிருக்கிறதுக்குக் காரணம், என்னுடைய இயல்பான தன்மை. 16 வயதினிலே படம் தயாரிப்புல இருக்கும்போது கிட்டத்தட்ட முடியிற சூழ்நிலை... உச்சகட்டம் மட்டும்தான் படம்பிடிக்க வேண்டியது பாக்கி. மத்ததை முடிச்சாச்சி. வியாபாரம் ஆகல. வந்து பார்த்த விநியோகஸ்தர்கள் எல்லாம் வாங்கல. அப்ப... அந்தச் சூழல்ல நான் போய்க் கதை கேக்குறேன். எனக்குக் கதை புடிச்சிது. புடிச்சவொடன வடஆற்காடு, தென்னாற்காடு, செங்கல்பட்டு... NSC பகுதி... அப்ப அதுதான் பெருசு. விநியோக உரிமையை வாங்கினேன்.
கதை கேட்டு முடிஞ்சவொடன பேசி முடிவு பண்ணுனதுனால பாரதிராஜாவால அதை நம்பமுடியல. ‘ஏன்னா அதுக்கு முந்தி பலருக்கும் கதை சொல்லப்பட்டு பலரும் கேட்டுட்டு அய்ய.. இது ஓடாதுய்யா... என்னய்யா... கமலஹாசன் ஒரு விளையாட்டுப் பையன் மாதிரி நடிச்சுக்கிட்டிருந்தவரு.. அவரப் போயி இப்படி வெத்தல பாக்கு போடவச்சி... முடிய... அசிங்கப்படுத்திக் கேவலப்படுத்தியிருக்கேய்யா... என்னத்த ஓடும்’ இப்படின்னு எல்லோரும் சொன்னாங்களாம். நான் போய்க் கதையைக் கேட்டு முடிச்சிட்டு பிரமாதமாயிருந்திச்சின்னு கைகுடுத்து வியாபாரம் பேசலாம்னதும் அவருக்கு ஆச்சர்யம் தாளமுடியல. என்னைக் கேட்டாரு ‘என்ன காதர்... நெசமாத்தான் சொல்றீங்களா? நெசமாத்தான் படம் புடிச்சிருக்குதா... நெசமா வாங்குறீங்களா?... எனக்கு ஒண்ணுமே புரியல’ அப்படின்னாரு. நான் சொன்னேன். ‘ஒரு அடிப்படையான கருத்தைச் சொல்லியிருக்கீங்க. ஆளப் பாக்காதே. ஆடையப் பாக்காதே. மனசப் பாரு... இது, கிராமத்துலயிருந்து பட்டணம் வரைக்கும் எல்லாருக்கும் தேவையான ஒரு கருத்து. இது எல்லா ஜனங்களுடைய மனசுக்கும் தெரிஞ்ச விஷயம். அதனால இந்தக் கருத்து ஜெயிக்கும். எனக்கு நம்பிக்கையிருக்கு. அதனாலதான் நான் வாங்குறேன்னேன். கட்டிப் பிடிச்சிட்டாரு. ஆக, அன்னைக்கி ஆரம்பிச்சது என்னோட பழக்கம். பாரதிராஜா மாதிரி இன்னைக்கி நகரத்தில இருக்கிற 90% பேர் கிராமத்திலிருந்து வந்தவுங்கதான். கிராமத்துல இயல்பான வாழ்க்கை வாழ்ந்துகிட்டிருந்தவுங்கதான். அவங்களால பட்டணத்துக்காக வாழ்க்கை முறைகளை மாத்திக்க முடியாது. கிராமத்தானாகவே வாழ்ந்திட்டிருக்கோம் எல்லோரும். அதனால இது இயல்பா அமையற விஷயம்.
உங்க நடிப்புல இருக்கிற இயல்பான தன்மைதான் பாரதிராஜாவுக்குப் புடிச்சிருக்கு. அதைத்தான் நாமளும் பேசிக்கிட்டிருந்தோம். அந்த இயல்பு இருக்கட்டும். நீங்க சிவாஜி ரசிகரா இருந்தா அந்த மாதிரி நடிப்புதான் சரின்னு பின்பற்றியிருக்கலாம். எம்.ஜி.ஆர்ட்ட ஒரு மிகையில்லாத யதார்த்தத் தன்மை பல இடங்கள்ல நுணுக்கமா வந்திருக்குறதைப் பார்க்க முடியும். வித்தியாசமான குணச்சித்திரங்களை அவர் பண்ணல அவ்வளவுதான். எம்.ஜி.ஆர். ரசிகரா இருந்ததால உங்களுக்கும் அந்த இயல்பான தன்மை இலகுவாக வந்திருக்குதா? 
இருக்கலாம். அப்படியும் இருக்கலாம்.

சரி... ‘தவமாய்த் தவமிருந்து’ படம் பற்றிப் பேசலாம். நீங்க சிகரெட் குடிச்சதைப் பார்த்து சேரன் வருத்தப்பட்டார்னு சொன்னீங்களே. அதைச் சொல்லுங்க. 
ஒவ்வொரு ‘ஷாட்’டின் இடையிலும் உடனே உக்காந்து சிகரெட் குடிப்பேன். படத்துல ஐந்தாவது உருவ மாற்றம்... உண்மையாத் தாடி வளர்த்து ரெண்டு மாசம் வளரவிட்டு அந்தக் காட்சியை எடுத்துக்கிட்டிருக்கோம். அப்ப ‘ஷாட்’ இடையில சிகரெட் குடிச்சிக்கிட்டிருக்கேன். அப்ப, சேரன் எங்கிட்ட வந்தாரு. வந்து, ‘அண்ணே... ஒரு விஷயம் சொல்லுவேன். தப்பா எடுத்துக்கக் கூடாது’ அப்படின்னாரு. என்னது சொல்லுங்க சேரன் என்றேன். ‘இல்ல... எனக்குச் சொல்லவும் முடியல. சொல்லாம இருக்கவும் முடியல. நீங்க எங்கே தப்பா எடுத்துக்குவீங்களோன்னு அதுவே பயமாயிருக்கு. உங்க மனசு கஷ்டப்பட்டா எனக்குத் தாங்காது’ன்னாரு... தம்பி! ஒண்ணுமில்ல. எதவேணா எங்கிட்ட தைரியமாய்ப் பேசலாம். எதாயிருந்தாலும் சொல்லுங்கன்னேன். ‘எங்க அப்பா முத்தையா சிகரெட் குடிக்கறதை என்னால ஜீரணிக்க முடியல’ அப்படின்னாரு. சொல்லிக்கிட்டிருக்கும்போதே பின்னாடி நிக்குறாரு ஒளிப்பதிவாளர் பிரபு. அவரும் ‘அண்ணே... ஆமாண்ணே... எனக்கும் மனசுக்குள்ள உறுத்திக்கிட்டேயிருந்திச்சி. ஏன்னா நீங்க நடிக்கும்போதெல்லாம் நான் ‘மானிட்டர்’ல பார்த்துட்டு அப்படியே உணர்ச்சிவசப்பட்டு உட்கார்ந்துக்கிட்டிருக்கேன். சிகரெட் குடிக்கறத என்னால ஜீரணிக்க முடியல. அந்த ‘மானிட்டர்’ல நடிச்சிருக்கிறாரே அவரா... சிகரெட் குடிக்க மாட்டாரேன்னு தோணுது. ரொம்ப வேதனைப் பட்டுக்கிட்டு இருந்தேன்’னாரு (சிரிக்கிறார்). அது என்னன்னா... எந்த அளவுக்குச் சேரன் அந்தக் கதாபாத்திரத்தோடு ஒன்றியிருந்தால் சிகரெட் குடிச்சதைக்கூட தாங்கிக்க முடியாத ஒரு மனநிலை வந்திருக்கும்? முத்தையா சிகரெட் குடிச்சிருக்கக் கூடாதே... அப்ப நம்ம சேரன் அளவுக்கு நாம ஒன்றலையேன்னு எனக்கே வெட்கமாயிருந்திச்சி.
கதாபாத்திரத்தோட ஒன்றுதல் பற்றிய மேனாட்டு நாடக அறிஞர்களின் நடிப்புக் கோட்பாடுகள் பற்றி எதுவும் உங்களுக்குத் தெரியுமா? 
தெரியாது.

ஆனாலும் கதாபாத்திரமாக மாறுதல்ங்கற தன்மை உங்களுக்கு இயல்பா வந்திருக்கு. அதுவும் இந்த மண்ணுலயிருந்து கெடச்ச ஒரு விசயமாத்தான் அது இருக்கு. அதனாலதான் இறைவன் அருள்னு... நல்ல குடும்பச் சூழல்னு எளிமையா விடை சொல்லிடுறீங்க. இருக்கட்டும். தவமாய்த் தவமிருந்து முத்தையா கதாபாத்திர உருவாக்கத்துக்கு ஒங்க சொந்த வாழ்க்கையிலுள்ள ஏதாவது விஷயங்கள் உள்ள போயி உதவியிருக்கா? 
அதாவது என் தகப்பனார் பத்திச் சொன்னேன்லா. நான் சிஷ்யனாப் போகும்போது... பற்றற்று இருந்தவுங்க... அவங்க மொகம் எப்பவும் நிர்மலமாயிருக்கும். ஆனா என்னை புள்ளையா தத்தெடுத்ததுக்கப்புறம் சிலசில விஷயங்கள் நடந்தது. எம் புள்ளையை பேசிட்டானான்னு மொகம் ஜிவுஜிவுன்னு செவந்துபோகும். பற்றற்ற துறவிக்கு உள்ளே அவ்வளவு கோபம் வரும். என்கூட பேசாம ஒரு கோபம். அதுமாதிரி என் புகைப்படம் எதுலயாவது வந்ததுன்னா அப்படியே அதைப் பாத்துட்டு இப்படியே தடவிக் குடுப்பாரு. இதெல்லாம் ஆரம்பத்துல எம் மனசுல பதிஞ்சுருக்கு. என் மகன் திப்புசுல்தான் என்மேல காட்ற பாசம்... ஒருநா இரவுல தூங்கிட்டு இருக்கும்போது நான் முழிச்சிட்டு இருக்கிறதைப் பார்த்து அவரு எழுந்து உக்காந்துகிட்டு, ‘வாப்பா... என்ன வாப்பா’ன்னு... பெரிய மனுஷன் மாதிரி... நான் சின்னக் குழந்தை மாதிரி... என் தகப்பனார் என் மேல காட்டுன பாசமும், என் மகன் என்மேல காட்டுற பாசமும், எனக்குள்ளே போயி... அதத்தான் பாசமா வெளிக்காட்டணும்னு தோணுது. அப்படித் தோன்றதுக்கு ஒரு நல்ல ஆதாரம் இருக்கு.
அந்த சிகரெட் விசயம் நடந்துச்சில்லா. அதுக்கு அப்புறந்தான் கவனிக்க ஆரம்பிச்சேன். அதுக்கு முன்னாடி அண்ணன் தம்பியாட்டம் பழகிக்கிட்ருந்தோம். நல்லா பேசிக்கிட்டிருந்தோம். அதுக்கப்புறம் கவனிச்சா... ‘ஷாட்’களுக்குக் கூப்பிடும்போது மொதல்ல எல்லாம் அண்ணன் எங்கே... அண்ணன் எங்கேன்னு கேப்பாரு. அந்தச் சம்பவத்துக்கப்புறம் ‘அப்பா எங்கே... அப்பா எங்கே’ன்னு கேக்குறாரு. கூப்பிடுறாரு. அந்த நிமிஷத்துல என் மனசுக்குள்ள இவரு நம்ம பையன்தான். அப்படின்னு தோணுது. ஆக, நீங்க சொன்ன விஷயம் நடக்குது.

பையன்களுக்கு அப்பா மேல பயங்கலந்த மரியாதையும், அம்மா மேல பாசமும் இருக்கறதாத்தான் பொதுவாகக் காட்டுவாங்க. ஆனா, தவமாய்த் தவமிருந்து படத்துல அது மாத்திக் காட்டப்படுது. உங்க வாழ்க்கையில அதுக்கான அனுபவம் எதுவும் உண்டா? 
உண்டு... அதாவது என் பையன் ஏழு மாசத்துல பொறந்த கொழந்தை... ஏழு மாசத்துல பொறந்த கொழந்தையை ‘இன்குபேட்டர்’ல வச்சிதான் பாதுகாக்கணும். ஆனா எனக்கு... அதாவது மின்சாரம் விசயம்லா... எல்லா மருத்துவமனையிலயும் நல்லா பாதுகாப்பாதான் செய்வாங்க. ஆனா நமக்கு மனசு கேக்கல. அதுல வைக்க அனுமதிக்கல. வீட்டுக்குத் தூக்கிக்கிட்டு வந்து, சாயந்தரம் 6 மணியிலிருந்து மறுநா காலை 6-7 மணி வரைக்கும் கிட்டத்தட்ட 12-13 மணிநேரம் என் நெஞ்சுமேலயே வச்சிக்கிட்டுத் தூங்குவேன். நம்ம உடம்புச் சூடு அவருமேல பாயும்போது நல்லாருக்கும் புள்ளைக்கு. காலைல 7-8 மணிக்கு என்னுடைய மாமியார், மனைவி எழுந்ததும் அப்புறம் அவுங்க கையில கொழந்தைய ஒப்படைச்சிட்டு அப்புறந்தான் நான் செய்ய வேண்டியதைச் செய்வேன். பகல்லயும் 5-7 மணிநேரம் அப்படியே வச்சிருப்பேன். இப்படியே நெஞ்சில் போட்டு வளர்த்தது ஒன்றரை வருஷம். அப்படியிருந்ததுனால அவருக்கு அப்பா அம்மா எல்லாமே நான்தான்னு நெனச்சுக்கிட்டிருக்காரு. நான்தான் ஒரே பையன். இன்னும் பகுத்துப் பார்க்கத் தெரியல. வர்றவுங்க போறவுங்க ‘அய்யா அய்யா’ன்னு சொல்றது சரியாம்பாரு. சில நேரம் ‘வாப்பா’ம்பாரு. சில நேரத்தில ‘டாடி’ம்பாரு. ஏன்னா என் வளர்ப்புப் பொண்ணு என்னை ‘டாடி’ன்னு கூப்பிடும். அதுகிட்ட என்னைய ‘டாடி’ம்பாரு. இப்படிக் கூப்பிடுவாரே தவிர, நமக்கு அப்பா மட்டும்தான் சொந்தம் அப்படீன்னு நெனச்சிக்கிட்டிருக்காரு. நேத்து டி.வி.யில டாப் 10 பாடல்கள் நிகழ்ச்சியில் மூணாவது இடம்னு ‘சண்டைக்கோழி’ பாடல் துணுக்குப் போடுறாங்க. தவமாய்த் தவமிருந்து, சண்டக்கோழி பாடல்களின் இசை, ட்ரெய்லர் எல்லாத்தையும் மனசுக்குள்ள போட்டுவச்சிருக்காரு. இசையைக் கேட்டவொடன, கால்மேல கால்போட்டு ரெடியாயிட்டாரு. ஒரு வினாடியில அது போயிட்டுது. ஒடனே பரபரப்பா ஆயிட்டாரு. டி.வியை நிறுத்தச் சொல்றாரு. ஆக, அவரு மட்டுந்தான் என்னைய ரசிக்கணும்... நான் மட்டும்தான் அவருக்கெல்லாம் முக்கியத்துவம். நான் மட்டும்தான் எல்லாம்னு வாழ்ந்துகிட்டிருக்காரு. அதனால எனக்குத் தெளிவான ஒரு விஷயம். ‘என் புள்ளையப் பிரிஞ்சு என்னால இருக்க முடியாது’ங்கறது.
இதுதான் தவமாய்த் தவமிருந்து படத்துல உங்க நடிப்புக்கும் உதவியிருக்கா? 
ம்ம்ம்... என் தகப்பானார் ஷையத்பாபா என் மேல வச்சிருக்கிற பாசமும் என் மகன் திப்புசுல்தான் என் மேல வச்சிருக்கிற பாசமும்... இதனுடைய விளைவுகள் எல்லாம் என் உள்மனசுல இருந்து அதனுடைய வெளிப்பாடுகளாகத்தான் இதையெல்லாம் வரவச்சிருக்குன்னு நெனைக்கிறேன்.

முதல்ல குழந்தைகளை நீங்க சைக்கிள்லே வைச்சு ஓட்டிக்கிட்டு வர்றது நல்லா வந்துருக்கு. உங்களுக்கு சைக்கிள் ஓட்டத் தெரியாதுன்னுகூட சொன்னாங்களே? 
ஆமா... பத்து பன்னிரெண்டு வயசுக்கு முன்னாடி சைக்கிள் ஓட்டுனதுதான். அதுக்கப்புறம் சைக்கிள் ஓட்டச் சந்தர்ப்பம் வரலை. படப்பிடிப்பிலே சைக்கிள் ஓட்டனும்னு சொன்னாங்க. சைக்கிள் ஹேண்டில்பார்ல கேமிரா ‘ஃபிக்ஸ்’ பண்ணினாங்க... அதுக்கேத்தபடி இன்னொரு பக்கம் வெயிட் ஏத்துனாங்க. அதுனால வெயிட் கூடி குழந்தைகளோட வெயிட்டும் கூடிறுச்சு. அண்ணன் சைக்கிள் ஓட்டுவாரா. கேளுங்கன்னாரு சேரன். நாம இறைவன் மேல நம்பிக்கை வைச்சுருக்கோம். எந்தக் காரியமா இருந்தாலும் நம்மாலே செய்யமுடியும். முடியாதுங்கறது கிடையாது. இறைவன் கொடுத்த சக்தியில் வெறும் அஞ்சு சதவிகிதத்தைத்தான் நாம உபயோகிச்சுகிட்ருக்கோம். அதனால நாம செய்ய முடியும்னேன். முதல்லே ஒரு மணி நேரம் ஓட்டிப் பார்த்தேன். வந்துருச்சு.

சைக்கிள் ஓட்டும் சிரமம், பிள்ளைகளைப் படிக்க அழைத்துச் செல்லும் பெருமிதம், வறுமையின் எளிமை எல்லாம் உங்க நடிப்புல அழகா வந்திருக்குது. அந்தக் காட்சியைப் படமாக்குறதுக்கு முன்னாடி எப்படி ஒங்க மனசுக்குள்ளே அதைக் கொண்டு வருவீங்க? 
இதையெல்லாம் சேரன் சொல்லுவாரு. காட்சியை வரி வரியாக விவரிச்சுச் சொல்லுவார். அண்ணே... இப்படிக் கேக்குறாங்க... இப்படி நீங்க உணர்றீங்க.. ஒங்க மனசுல இன்னின்ன உணர்வுகள்லாம் வருது அப்படின்னு சொல்வாரு. சொல்லும்போது அப்படியே மனசுல உள்வாங்கிக்குவேன். என் பையன்கிட்டே நான் தகப்பனா அனுபவிக்கிற சொகம் அந்தக் காட்சியிலே இயல்பா வெளிப்பட்டிருக்குன்னு நினைக்கிறேன். நான் முழுக்க முழுக்க சேரன் சொன்னதை கிரகிச்சுக்கிட்டு அப்படியே பிரதிபலிச்சேன்னு சொல்றதுதான் பொருத்தமா இருக்கும்.

இந்தப் படத்தில பையனிடம் ‘ஐநூறுதான் இருக்குன்னு தவிப்போட கொடுக்கிற இடம் சேரனும் அவரோட மனைவியும் வீட்டுக்குள்ளே நுழையுறப்போ வீட்டுல பேசாம பீரோவைத் திறக்கிற மாதிரி மனைவியின் முகபாவத்தைக் கவனிக்கிற காட்சி. உங்க பையன் தப்பா இரவில் தங்கிட்டு வர்றப்போ அதைக் கேட்டுப் புழுங்குவதும் காலையில் வேலைக்குப் போறப்போ மௌனமா ‘ம்ம்’ என்று சொல்கிறபோது முகம் இருளடைந்துபோற அந்தக் காட்சியும் அற்புதமா வந்திருக்கு. அதற்கான சூழலை ஏற்படுத்தியிருக்கிறார் சேரன். இருந்தும் அந்த உணர்வை ரொம்பப் பொருத்தமாகக் காட்டியிருக்கீங்களே? 
எல்லாமே சேரன் சொன்னதுதான். என்னுடைய சின்னச்சின்ன அசைவுகள்கூட அவர் எனக்குள்ள ஊட்டியவைதான். நான் சுயமா எதுவும் பண்ணலை.
பீரோவைத் திறக்க ஒங்க மனைவியைத் தாண்டிப் போகும்போது ஒரு அண்டாவை இயல்பாகத் தட்டித் தடுமாறி செல்வது அப்படியே மனசில நிக்குது. 
அதுவும் சேரன் சொன்னதுதான். மொதல்ல சாதாரணமாப் போகும்போது அவர்தான் சொன்னார், ‘அந்த அண்டாவை லேசா தட்டிட்டுப் போங்களேன்னு!’
பல படங்களில் அம்மாக்களைக் காண்பிச்ச அளவுக்கு அப்பாக்கள் காண்பிக்கப்படலை. ஆனா எல்லோருடைய வாழ்க்கையிலும் இந்தப் படத்தில் வர்ற அப்பா மாதிரி இருந்திருக்காங்க. அதை மொத்தமா சேரன் தொகுத்து இந்தப் படத்திலே கொடுத்திருக்கார். இனிமேத்தான் உங்களுக்கு ஒரு சவால் இருக்கு. பலதரப்பட்ட இடங்களிலிருந்து உங்களுக்கு நல்ல அங்கீகாரம் கிடைச்சிருக்கிற சூழ்நிலையிலே நாளைக்கு நடிப்பில் இதைவிடப் பெரிதாக பண்ணியாகவேண்டிய சவால் உங்க முன்னாடி இருக்குல்லே? 
சின்ன வயசுப் பையன்களிலிருந்து வயசான ஆட்கள் வரை இந்தப் படத்திலே என் நடிப்பைப் பார்த்துட்டு எங்க அப்பாவைப் பார்த்த மாதிரி இருக்குங்கிறாங்க. இதைவிட ஒரு மனுசனுக்கு வேறு என்ன சந்தோஷம் இருக்க முடியும்? சொல்லுங்க... கூலியை வாங்கிக்கிட்டு வேலை செஞ்சதுக்கு எவ்வளவு பாராட்டு? அப்போ எங்கிட்டே இதைவிட நிறைய எதிர்பார்க்கிறாங்க. அந்த எதிர்பார்ப்புக்கேத்தபடி பாத்திரங்கள் வந்தாத்தான் என்னாலே இனி பண்ணமுடியும். சேரன் மாதிரி, இயக்குநர்கள் நல்ல கதையோடு வரும்போதுதான் பண்ணனும். இல்லைன்னா சொந்தப் படம்தான் எடுக்கணும். அந்தப் படமும் சனங்ககிட்டே இப்போ இருக்குற எதிர்பார்ப்புக்குத் தகுந்தபடி இருக்கணும். அதுதான் முக்கியம்.
தவமாய்த் தவமிருந்து படத்திற்கு விதவிதமான பாராட்டுக்கள் எல்லாம் வந்திருக்கும். அதிலே குறிப்பிட்டுச் சொல்ற பாராட்டு எதாவது இருக்கா? 
பாராட்டு பல இடங்களிலிருந்து வந்தது. அதற்குப் பெரிய இடம், சின்ன இடம் என்கிற பேதமில்லை. யார் பாராட்டினாலும் சந்தோஷம் ஒண்ணுதானே. ஒவ்வொருத்தர் பாராட்டும்போதும் எனக்கு சேரனோட முகம்தான் ஞாபகத்துக்கு வருது. இந்தப் பாராட்டுக்கெல்லாம் சொந்தக்காரன் நம்ம மூத்த பய சேரன்தான்னு தோணுது.

‘என் ராசாவின் மனசிலேவந்தபோது உங்களுக்குக் கிடைச்ச அங்கீகாரம் இப்போ மறுபடியும் கிடைச்ச மாதிரி உணர்றீங்களா?  அந்த அங்கீகாரம் அப்படியே இருந்துகிட்டிருந்தது. மூணு வெள்ளிவிழாப் படங்களை முன்னாடி தொடர்ந்து கொடுத்தோம். இடையிலே நாம தொடர்ச்சியா படங்கள் கொடுக்காததாலே மக்கள் நம்மை நினைவில் வைச்சுருக்காங்காளா, இல்லையான்னு புரியாம இருந்துச்சு. இந்தப் படம் வெளிவந்த பிறகு அங்கீகாரத்தை அப்படியே வைச்சிருக்காங்க. இப்போ அந்த அங்கீகாரம் பன்மடங்காப் பெருகிடுச்சுன்னு நினைக்கிறேன்.
பல ‘கெட் அப்களில் இந்தப் படத்திலே வர்றீங்க. நடையிலும் மாற்றம் வருது. குரலிலும்கூட அந்த மாற்றம் இருக்கே? 
குரலிலே மாற்றம் இருக்குறதுக்கும் தூண்டுகோல் சேரன்தான். இந்த இடத்திலே குரலைத் தளர்த்திப் பாருங்க’ன்னு என்னைப் பேசச் சொல்லிப்பார்த்து ‘இந்த அளவுலே குரலை வைச்சுக்குங்க’ன்னு சொன்னவர் அவர்தான். ஏன்னா... நாம பண்ற விஷயத்தோட மதிப்பு நமக்குத் தெரியாது. பார்க்கிறவங்களுக்குத்தான் தெரியும். நமக்கும் நாம நடிக்கிற கதாபாத்திரத்திற்கும் உள்ள பந்தம் நாம எப்போ நடிக்கப் போனோமோ அப்ப இருந்து உருவானதுதான். ஆனா... இயக்குநருக்கும் அந்தக் கதாபாத்திரத்துக்கும் பல வருசமா பந்தம் இருக்கு. நம்மைவிட இந்தக் கதையில அவருக்குப் பிடிப்பு ஜாஸ்தி. இந்தக் கதாபாத்திரம் எப்படி இருக்கும்? எப்படி நடிக்கும்? அதோட குரல் எப்படி இருக்கும்ன்னு பல வருசமா சேரன்கிட்டே பதிஞ்சு போயிருந்திருக்கு. அதை நம்மகிட்டே இருந்து கொஞ்சங்கொஞ்சமா மாத்திக் கதாபாத்திரமா கொண்டுவர்றது அவருக்குச் சுலபமாயிருச்சு. அவர் அப்படியெல்லாம் நம்மகிட்டே வேலை வாங்கினதுனாலேதான் நம்மளாலே பண்ண முடிஞ்சது.
நீங்க அந்தக் கதாபாத்திரத்தை இப்படிப் பண்ணலாமான்னு சேரன்கிட்டே கேட்டிருக்கீங்களா? 
அது வரலை. என்னன்னா எனக்கும் சேரனுக்கும் கிட்டத்தட்ட மன அலைவரிசை ஒரே மாதிரியா இருக்கு. அதுனாலே அந்தக் கதையைச் சொல்லும்போது வேறு எந்தக் கேள்வியும் எனக்கு எழலை (சிரிக்கிறார்).
வீட்டிற்குள்ளே பையன் திப்புசுல்தானின் கீச்சுக் குரல் அவரை அழைக்கிறது. “இந்தா... வந்துர்றேன் தங்கம்” என்ற பாசமான குரலுடன் உள்ளே போகிறார்.

மேலும் சுவரசியமான செய்திகளுக்கு: 


தொலைகடல் - (சிறுகதை)


நீண்ட செவ்வகக் கண்ணாடித் துண்டம்போல அசைவற்றிருக்கும் அந்த நீர்த்தொட்டி அடிக்கடி உயிர்பெற்று, ஒளியலைகளைச் சுவரெங்கும் விசிறும். அதன் எண்ணற்ற கண்களென அசையும் நிறம்நிறமான மீன்கள். ஆளற்ற வீட்டின் தரையிலும், சுவரிலும் ஆடும் கண்ணாடி நிழல்கள், கூடத்தில் யாரோ அமைதியாக அமர்ந்து உற்றுப் பார்த்துக்கொண்டிருப்பது போன்ற உறுத்தலையும், சங்கடத்தையும் ஏற்படுத்தும். அலுவலகத்திலிருந்து திரும்பும் ராதா கதவைத் திறந்ததுமே நடுக் கூடத்தில் உட்கார்ந்திருக்கும் அதனுள்ளிருந்து துருவும் பார்வைகள் தன்மீது மோதுவதை வெறுத்து, கைப்பையை விட்டெறிந்து, வாஷ்பேஸினுக்கு ஓடி, முகத்தைக் கவிழ்த்துக்கொள்கையில், இறைஞ்சிக் குவிந்த உள்ளங்கைகளில் தடைகளற்றுப் பொழியும் நீரின் ஆறுதல்.
தொட்டி நீருள் ஆழத் துள்ளும் மீன்கள் குழந்தை நவீனாவிற்கு மிகவும் ப்ரியமானவை. பள்ளி விட்டதும் அதன் முன்பு உட்கார்ந்து கொள்வாள் மணிக்கணக்காக. ‘அப்பாவின் கையைப் பிடித்துக் கொண்டு இதை வாங்கவென்று, மீன்பண்ணைக்குப் போன நாளை ஞாபகம் கொண்டாள். தான் கழற்றியிருந்த ஹெல்மட்டை மகளின் தலையில் மாட்டிச் சிரித்தார் அப்பா. பெரிய கவசத்திற்குள் சின்னஞ்சிறிய தலை. “விண்வெளி வீராங்கனை மாதிரியே இருக்கிறாய்” என்றார். வரிசையாக மீன்தொட்டிகள் அடுக்கிய நீள் அறையைச் சுற்றி நடந்தார்கள். விரிந்த கண்களைக் ‘கொட்டாமல், விடுபட்ட அப்பாவின் கைகளை மறந்து மீன்களைக் கவனித்தாள்; நீலத்தில் வெண் கோடிட்ட சிவப்பில் கரும்புள்ளியுள்ள கத்தியாக நீண்ட, நெல்மணிகளைப் போல் பொடிப் பொடியான மீன்கள். 
பழுப்பு நிறத்தில் படுத்துக் கிடக்கும் ஒரு தூங்குமூஞ்சி, இன்னொன்று செயற்கைப் பாறைகளில் முகத்தை முட்டி முட்டிக் குமுறும் அழுகுணி. சாம்பல் நிறத்திலிருக்கும் மற்றொன்று சிறு கற்களின் மீது, சிந்தனையே உருவாகக் குந்தியிருக்கும். 
நவீனாவின் தொட்டியில் தங்கம் தடவிய, சாம்பல் வரிகளோடிய சிறு மீன் ஒன்றும் சிறு மயிர்கள் போன்ற கருஞ்செதிள்களோடு இருந்தது. அது அம்மாவின் மூடிய இமைகளைப் போலிருக்கிறதென்று நினைத்தாள்.
அவர்கள் வீடு சேர்ந்தபோது வியர்த்த முகத்தோடு அடுப்படியிலிருந்து வெளிவந்த ராதா மீன்தொட்டியை வெறித்தாள். அவள் முகத்திலொரு அசாதாரணமான திகில் படர்ந்தது. 
“உள்ள வேலையே பார்க்கத் தீரல. இதில் இது வேற எதுக்கு இப்ப? உங்க ஆபீஸ் பெங்களூரில். நீங்க போய்டுவீங்க நாளைக்கே. நானும் ஆபீஸுக்கு. இவ ஸ்கூலுக்கு. யார் இதைக் கட்டிச் சேவிக்கிறதாம்?” வழக்கத்துக்கு மாறான உரத்த குரலில் சிடுசிடுத்தாள் ராதா. 
வீட்டைப் பெருக்கிக்கொண்டிருந்த முத்தம்மா, “பிள்ளை ஆசைஆசையா வாங்கியாந்திருக்கு. இருந்துட்டுப் போகட்டுமேம்மா. நான் பாத்துக்கிறேனே” என்றாள் தயங்கியபடியே. ரகு – எத்தனை நாளைக்கொருதரம் எப்படித் தண்ணீர் மாற்ற வேண்டும் என்ற விவரமும், உணவளிக்கும் விதமும் சொல்லச் சொல்ல, அப்பாவையே ஆர்வத்தோடு பார்த்தாள் நவீனா. மறுபடி சலிப்போடு அடுப்படிக்குள் நுழையப்போன அம்மாவிடம் மகள் “பாரும்மா, இதான் நீ” என்றாள் தங்கமீனைச் சுட்டி. நெருப்புத் தீண்டிய துணியாகச் சுருங்கியது ராதாவின் முகம். “இல்லை, அது நானில்லை. என்னால் எந்தத் தொட்டியிலும் அடைந்து கிடக்க முடியாது” முணுமுணுத்தாள் சோர்வாக. 
வெளியூர் வேலையில் அப்பா. வீட்டிலில்லாத அம்மா. பள்ளி முடிந்ததும், எதிர் வீட்டில் சாவி வாங்கித் திறந்து யாருமற்ற வீட்டிற்குள் மீன்களோடிருப்பாள் நவீனா. அவற்றிற்குப் பெயரிடுவாள் யோசித்து, யோசித்து. “ஜிட்டு, பட்டு, ஜில்லு, குலு, ஜங்லி” என்று என்னென்னவோ பெயர்கள். “சாப்பிட்டாயிற்றா” என்று விசாரிப்பில் துவங்கி, அவற்றோடு சளசளவென்று பேசுவாள். பள்ளிக் கதைகள், அப்பா – அம்மாவின் சம்பள நாள் சண்டைகள், பாதையோரச் செடியிலிருந்த மஞ்சள் வயிறுள்ள பறவை, ஏதேதோ கேள்விகளோடு, மீன்களின் பதில்களுக்கான இடைவெளியைக் கவனமாக விடுவாள். “ம்ம்ம்” என்று தலையாட்டிக் கொள்வாள். வாயைத் திறந்து திறந்து மூடும் மீன்களை வெளிக் கண்ணாடியில், முகம் பதித்து முத்தமிடுவாள் செல்லமாக. 
இன்றென்னவோ அவள் கூம்பிய முகம்; சிவந்த கண்கள்; இறுகிய உதடுகள். கவனித்து மிரண்ட இரட்டை வால் மீன் ஓடிப்போய் சண்டைக்காரனிடம் சொன்னது. நட்சத்திர மீன்கள் சுழன்றுகொண்டே கேட்க, முதிர்ந்து கழுத்த பஞ்சாயத்துக்கார மீனும் நீண்ட தாடியைத் தடவியபடியே யோசித்தது தீவிரமாக. நவீனா தன் குட்டை ஜடையின் பட்டாம்பூச்சிக் க்ளிப்பைப் பிடுங்கித் தரையில் விட்டெறிந்தாள். அந்தச் சத்தத்திற்குப் பதிலாக அம்மாவின் அறையிலிருந்து ஒரு அசைவோ, அதட்டலோ எழும்பாததில் எரிச்சலாகி இன்னும் சிவந்தது அவள் முகம். 
அவள் தன் சிறிய நாற்காலியை மீன்தொட்டிக்கு அருகில் இழுத்துப்போட்டு, ஏறிநின்று நீண்ட கைப்பிடியுள்ள பிளாஸ்டிக் வலையால் தண்ணீரைத் துழாவத் தொடங்கினாள். வெறிகொண்ட சிறு கைகள் நீரைப் புரட்டின. மிரண்ட மீன்கள் பதற்றத்தில் அங்குமிங்கும் சிதறி, தொட்டியிலிருந்த சிறுகற்களூடேயும், தாவரங்களுக்கிடையேயும் ஒண்டின. 
தங்கமீன் மட்டும் தன்னந்தனியே மிதந்து கொண்டிருந்தது அலட்சியமாக. பிளந்த வால் நொடிக்கொரு தரம் சிமிட்டியது. அணைந்து கிடந்த தொலைக்காட்சித்திரை நீர் நிழல்களாடத் தன்னைத் தந்திருந்தது. குரோதம் பெருகும் விழிகளால் தங்கமீனைக் குத்தினாள் நவீனா. வலையை அதன்மீது வைத்து அழுத்தினாள். அவசரமாக அது அடித்தளத்திற்கு நழுவப் பார்க்கையில் தன் கையைத் தோள் வரையிலும் தொட்டிக்குள் விட்டு, ஒரு சிறுமிக்குச் சாத்தியமேயற்ற பலத்துடன் அதை நசுக்கித் தீர்த்தாள். வலையைத் தொட்டிக்குள்ளேயே எறிந்துவிட்டு, ஸோபா மூலையில் சுருண்டு கொண்டாள். சென்ற வாரத்தின் அந்த இரவு. அரை உறக்கத்தில் முதுகை வருடிய அம்மாவின் விரல்கள். அம்மா அவள் கருவிழிகளை அசையவில்லையெனத் தன் சுண்டுவிரலை மிக மென்மையாக மூடிய இமைமீது வைத்துச் சோதித்தாள். மகளின் கையிலிருந்த தன் முந்தானையை விடுவித்துக் கொண்டு அறையை விட்டு வெளியேறினாள். ஆனால் அவளுக்குக் குழந்தை ஏன் இவ்வளவு சீக்கிரமே தூங்கவேண்டும் என்றிருந்தது. ஆழ்ந்த உறக்கத்திலும் அவள் மீன்களைக் கொஞ்சிக் கொண்டிருந்தாள். தனது அறைக்குள் ராதா நுழைந்தபோது காற்றிலாடிக்கொண்டிருந்தன ஜன்னல்கள். சற்றுத் தொலைவில் புரண்டு கொண்டிருந்தது கடல் ரகசியமாகக் காமமுற்ற பெண்ணைப் போல. 
மங்கலான நிலவொளியில் அதன் கருநீல அலைகள் நிலைகொள்ளாமல் நெளிந்தன. பொங்கி எழும்பின. தயங்கித் தணிந்தன. ராதா கட்டில் விளிம்பிலிருந்த தன் கல்யாணப் புகைப்படத்தைத் திருப்பி வைத்தாள். மறுபடி அதை எடுத்து ரகுவை ஒரு தரம் பார்த்துவிட்டுக் கவிழ்த்துப் போட்டாள். 
கலைந்த புடவை கொடியிலாடித் துடித்துக் கொண்டிருந்தது. தானுமொரு கருங்கடலாய் உருக்கொண்ட இரவு அலையோசையை அதிரவிட்டது அவள் உடலெங்கும். படுக்கையருகே துழாவி, அந்தப் புத்தகத்தை எடுத்துத் திறந்த்தும் அரை இருளிலும் ஒளிர்ந்துகொண்டிருந்தன விஷ்ணுவின் விழிகள். மென்நீல விளக்கொளியை அமைத்துக் கட்டிலில் சரிந்து அவன் புகைப்பட முகத்தை உற்றுக்கொண்டிருந்தாள் நெடுநேரம். கடுமையும், எச்சரிக்கையும் தொனிக்கும் கண்கள். சட்டென ஒற்றை விரலால் அவற்றை மறைத்ததும், அந்த உதடுகள் குவிந்து நெகிழ்ந்து அழைப்பதாக உணர்ந்தாள். ஒருவருமற்ற அறையின் தனிமையை மறுதரமும் உறுதிப்படுத்திக்கொண்டு, நா நுனியால் அந்த உதடுகளைத் தீண்டினாள். ஒரு நாள் எதிர்பாராமல் வீட்டினுள் நுழைந்த அவன் இதே செயலில் இருந்த அவளைக்கண்டு சிரித்தான். களவில் பிடிபட்டதைத் தாளமுடியாமல், சமையலறைக்கு ஓடியவளைத் துரத்திச் சொன்னான்: “முத்தம் மட்டும் இடாதே” காதோரம் கிசுகிசுத்த அவன் வார்த்தைகள் முதலில் புரிபடவில்லை. புரிந்ததும் அடுப்பின் ஆரஞ்சுத் தழல் அவள் கன்னங்களிலாடியது. அவன் எப்போதோ போய்விட்டிருந்தான். 
இன்னொருமுறை புகைப்படத்தில் குவியும் அவள் இதழ்கள், அறைக்குள் ததும்பும் கருமையின் தாபம், மார்பில் கவிழ்ந்திருந்த புகைப்படம், பாதிமயக்கத்தில் விழி மூடிப் புரண்டதில் இடுப்புக்குக் கீழே நழுவியதும் திடுக்கிட்டு அதை மறுபடி புத்தகத்துக்குள்ளேயே ஒளித்தாள். தான் வெளிச் சொல்லாத வெற்றுக் கனாக்களில் ஒன்றினைப் போல. 
அலுவலகத்தில் விஷ்ணு தன்னைச் சுற்றிலும் எழுப்பியிருப்பவை அச்சமூட்டும் வலுவான அரண்கள்:
“என் அறைக்குள் உத்தரவின்றி நுழையாதே – முன் அனுமதியின்றி தொலைபேசாதே. பேசுமுன் யோசித்துப் பேசு. உன் வேலையைப் பாரு” என்று எரிந்து விழுவான்; விரட்டித் தள்ளுவான். அவள் தொடவே கூடாத ஏதோ ஒன்றைப் பதுக்குவான் மன ஆழத்திற்குள். உரையாடல்களில் அவன் உருவாக்கியபடியே இருக்கும் விடுவிக்க முடியாத சிடுக்குகள், புதிர்கள். திரைகள் மௌனம் காக்க, கடல் நிம்மதியற்றுப் புரள நினைவில் இறைந்த சொற்களை மீண்டும் மீண்டும் மனநுனியால் தீண்டி ஒலியெழச் செய்துகொண்டிருப்பாள் இரவெல்லாம். 
“என்ன செய்கிறீர்கள்?” எனும் அவளது தொலைபேசிக் கேள்விக்கு, 
“என் தோழியோடு படுக்கையில் காதல் செய்கிறேன். இப்போது அவள் தூங்குகிறாள். போதுமா?” என்பான் மர்மமான தொனியில். 
பிறகொரு நாள் “அதெல்லாம் சும்மா. உன்னைச் சீண்ட” என்றொரு முடிச்சிடுவான். 
பேச்சேயற்ற சில நாட்களுக்குப் பின்னதான தனிமையில், தன்னையறியாமல் அனிச்சையாக அவன் எண்களை ஒற்றுவாள் தொலைபேசியில். ஒரு “ஹலோ”வில் நிரம்பி விடும் கண்களை, நல்லவேளை, அவன் பார்க்கவே முடியாது என நிம்மதியுறுவாள். 
“பிடிக்கலைன்னு சொன்னேனா என்ன? என்ன பிரச்சினை, அடிகிடி விழுந்ததா வீட்டில்?” அதிசயமாய்க் கனியும் அவன் குரல், மறுநாளே “பிடிக்குதுன்னு சொல்லலியே?” என்று அகப்படாமல் நழுவும். 
“உன் அழுகுணிக் கதைகள் எனக்கு வேண்டாம்” என்பான் முறைப்பாக. குழம்பிச் சரிவாள் தலையணையில். உள்ளங்கைக்குள் இருக்கும் அவன் நிழற்படத்திடம் ரகசியமாகக் கத்துவாள். ‘முரண்பாடுகளின் மூட்டை.’ 
கடலின் விடாத கூப்பிடுதல் சபலமூட்டும்; சுவர்களை மீறி வந்து அவளுடலை மோதும். விறைத்த முலைகளில் கிளைத்த பச்சை நரம்புகள் விரிந்து வெடித்துத் தேகமெங்கும் வலையாகப் படரும். அடிவயிற்றை உள்ளங்கை அழுத்தும். மனம் முணுமுணுக்கும். 
“இது தான் காமம். இது ரஜோ குணத்திலிருந்து உண்டானது. பெருந்தீனி தின்பது. மஹாபாவம் இது. இவ்வுலகில் காமமே பெரும் பகைவனென்று அறிவாயாக!” 
தூங்கிவிட்ட மகளிடம் ஓடி, சிறு கட்டிலுக்கு வெளியே நீண்டு தொங்கும் குட்டிக் கையைத் தொட்டுக் கொண்டு, குளிர் பரவிய வெற்றுத் தரையில் குப்புறக் கிடப்பாள். உடலுள் அலைகளாட, உள்ளங்காலைச் சிறு மீன்கள் சீண்டக் கண்கள் கரித்து வழியும். எதுவோ கீறலுறும் ஒலியில் பதறியெழுந்து மீன்தொட்டியைக் கவனமாகச் சோதிப்பாள். ஒற்றை விரலால் அணுஅணுவாக வருடுவாள். அவள் தொடுகையை ஏற்று மீன்கள் துள்ளும். தொட்டி இருக்கும் அசையாத திடத்தோடு நெருடலேயற்று.
மீன்கள் நெருங்கி, உரசி முத்தமிட்டன. உடனடியாக விலகின. தொட்டியின் சுவர்களோடு சமரசமாக உலவின. விரிந்து, விரிந்து வீடளவு விஸ்தாரம் கொண்டது தொட்டி.
அலைகளின் தன்மையை நிராகரிக்க இயலாதது அறைச்சுவர்களின் உறுதியின்மை. படுக்கையிலேயே காத்துக்கிடந்தது அந்தப் புகைப்படம். இறுகக் கடித்த உதடுகளோடு அதைப் புத்தகமடிப்பில் செருகினாள்; காற்றில் கலைந்து, மறுபடி வெளிவந்து, படபடத்தது கேலியாக. உடைகள் உடலை விலக்கித் துடிக்க, காற்றில் கூந்தல் கலைய தன்னையறியாமல் நகர்ந்து கொண்டிருந்தாள். கோடி நாகங்களின் விரிபடங்கள் ஜொலிக்கும் அலைகளை நோக்கி. பாதங்களை வருடி மீட்டும் அலைகள், கணுக்காலைக் கடந்து, முழங்காலுக்கு மேல் தொடைகளைத் தொட்டதும் திகிலுற்றுக் கட்டிலுக்கு ஓடிக் கனமான போர்வைக்குள் தன்னைப் பொதிந்தாள். அவன் விரல்கள் பிடரியை நெருடின. திகைத்து எழுந்ததும் போர்வைகள் சரிந்தன. அவன்தான். 
அஞ்சி நடுங்கும் குரலில், 
“எப்படி வர முடிந்தது?” என்றவாறே மேற்கூரைத் தளத்தை ஆராய்ந்தாள், சந்தேகமாக. 
“சொன்னேனே, வருவேனென்று” குறும்பாக நிசப்தங்களை ஊடுருவும் சிரிப்பு. 
“ஆனால் எப்படி?” 
“வாசல் வழியாகத்தான்” 
“நான் கதவை இறுக்கமாகப் பூட்டியிருந்தேனே” குழம்பினாள். 
“உனது பூட்டுகள் மிகவும் பலவீனமானவை. நீ எப்போதும் எல்லைகளை மீற விரும்புபவளாகவே இருக்கிறாய்” 
அவள் மறுத்தாள் அவசரமாக.
“இல்லை நான்...” 
குறுக்கிட்டான் “ஆமாம் நீ!” 
படுக்கையில் கிடந்த அவன் படம் கசங்கி விடக்கூடாதேயென்று பயந்தாள். மனத்தடைகள் நெகிழ, பொங்கும் கடலின் போக்கில் சுழன்ற உடல்கள். மதில்கள் விலகி நடந்தன. முத்தங்களில் அகலமாயின ஜன்னல்கள். இடையில் அழுந்தும் அவன் முகம். அவளுடலின் பிரியமான பகுதிகளைத் தொட்டுச் சுட்டி நகரும் விரல். ஈர மணலில் குறுகுறுக்கும் பாதம். கடலைக் குடித்துப் போதையுற்ற அறையில், அணைப்பில் கிறங்கிய அவள் கண்ணில் பதியவே பதியாமல் கடந்தது ஒருக்களித்திருந்த ஜன்னலில் – ஒரேயொரு நொறுங்கிய நொடி மட்டும் தெரிந்த மகளின் நுனி விழி. பளபளவென்ற கத்தி முனைபோல. சிறு திமிறலும் சாத்தியமின்றி அவனோடு ஒன்றிவிட்ட உடலை மீட்க முடியவில்லை. புரிந்தவனாக, “சும்மாயிரு. அவள் நன்றாகத் தூங்குகிறாள்” என்றான். கடல் முடிவேயற்றுப் பெருகியது. 
காலையில் தன் குற்றவுணர்வின்மையையே ஒரு குற்றமெனத் திரட்ட முயற்சித்தாள். வழக்கமான அடங்கள் இல்லாமல் மௌனமாகச் சாப்பிடும் மகளின் சலனமற்ற முகம் எதுவுமே சொல்லவில்லை. 
செத்து மிதந்த தங்கமீன் குப்பைவாளியில் கிடந்தது விறைத்த விழிகளோடு. பிறகு வந்த நாட்களில் ஒவ்வொன்றாக உயிரிழக்கத் தொடங்கின மீன்கள். ரகு ஊரிலிருந்து வந்த நாளில் துடித்துக் கொண்டிருந்த கடைசி மீனும் செத்ததை அவன் கவலையோடு கவனித்தான். அவன் கொண்டுவந்திருந்த கண்ணாடி ஜாடியில் புதிய மீன்களிருந்தன. சிறியதொரு தங்கமீனும்கூட. மீன்களின் சாவுதான் மகளின் உற்சாகமின்மைக்குக் காரமென்றெண்ணினான். 
இந்தப் புதிய மீன்களால் அவள் பழைய குதூகலத்திற்குத் திரும்புவாள் என நம்பினான். 
சாப்பாட்டு மேஜையில் மூவரும் உட்காருகையில் மின்சாரம் அறுந்தது. காத்திருந்தாற் போல் இருள் வீட்டிற்குள் நுழைந்தது பரபரவென்று. தயாராக இருந்த மெழுகுவர்த்திகளை ராதா ஏற்றினாள். சுடர்கள் எதற்கோ பதறி நடுங்கின. ஜாடி மீன்கள் ஒளியேற்றி நீந்தின. எதிர்எதிராக அவளும், கணவனும். தனி மூலையொன்றில் குழந்தை. “இருட்டில் சாப்பிட்டால் பேய்களும் நம்மோட சாப்பிடுமாம் சேர்ந்து” என்றாள் ராதா சகஜமான புன்னகையோடு. குழந்தையின் உதடுகள் அழுகைக்கு ஆயத்தமாவதுபோல் குவிகையில் அவள் ஒரு விதமான நிம்மதியையும், விடுவிப்பையும் உணர்ந்தாள். “சொல்லட்டும், சொல்லிவிடட்டும்” ராதா காத்திருந்தாள். 
குழந்தை கண்ணாடி ஜாடியின் வளைவுகளோடு மன்றாடிக் கொண்டிருந்த மீன்களைப் பார்த்தபடியே சொன்னாள். அவள் குரல் அபூர்வமான ஈரமும், சாந்தமும் நிறைந்ததாயிருந்தது. 
“இனிமேல் இந்த மீனையெல்லாம் கடலிலேயே விட்டுடுங்க அப்பா, தயவு செய்து” 
-பிறகு அவள் வேகவேகமாகச் சாப்பிடத் தொடங்கினாள்.

வயிரவன் கோயில் புராணம் - வயிரவன்பட்டி




வடிவுடை அம்பாள் சமேத வளரொளிநாதர் பெருமையையும், வயிரவ சுவாமிகளின் சிறப்பையும் பெரிதும் கூறுவது வயிரவன் கோயிற் புராணம் என்ற செய்யுள் நூலாகும். 19ம் நூற்றாண்டின் இறுதியில் வெளியிடப்பட்ட இந்த நூல் சேந்தன்குடி வி. நடராசக் கவிராயரால் இயற்றப்பட்டதாகும். இந்நூல் தேவக்கோட்டை வித்வ சிகாமணி, மேன்மைசால் வீர.லெ.சிந்நயச் செட்டியார் அவர்களால் குறைகள் களைந்து புதுக்கப் பெற்றுத் திருத்தமாக வெளியிடப்பட்டது. கவிச்சிம்புள் எனவும், கல்விச் சிங்கம் எனவும் கீர்த்தி பெற்ற திரு. வீர.லெ.சிந்நயச் செட்டியார் அவர்கள், தமிழ்ச்சங்கம் கண்ட பாண்டித்துரைத் தேவரின் இனிய நண்பர் ஆவார். திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களாலும், சிவத்திரு சொக்கலிங்க ஐயா அவர்களாலும், மகா மகோபாத்தியாய உ.வே.சாமிநாதையர் அவர்களாலும், பெரிதும் மதிக்கப்பட்ட இவர்கள் நகரத்தார் வரலாறு பற்றிய ஆராய்ச்சி செய்து நூல் வெளியிட்டுள்ளார். அன்னாருடைய புலமைத் திறனும், ஆராய்ச்சி வன்மையும், சிவானந்த ஈடுபாடும் பக்திச்சுவை சொட்டும் கவிநயமும் இப்புராணத்தில் விரவிக் காணப்படுகின்றன. வயிரவன் கோயிலுக்கு ஒரு சிறந்த தலபுராணத்தை வெளியிட்டமைக்குச் சிவநேசச் செல்வர்களும், தமிழ் அன்பர்களும் திரு. சிந்நயச் செட்டியார் அவர்களுக்குப் பெரிதும் கடமைப்பட்டுள்ளார்கள். அன்னாருடைய பொன்னார் திருவடிகளைப் போற்றி வணங்குகிறேன்.


  


புராணத்தில் திருமுறைத் தலங்களின் திருப்பணிகள் பல செய்த நகரத்தார் சமூகத்தினரின் பண்டைய வரலாறும், திருப்பணிகளின் சிறப்பும் கூறப்படுகிறது. மக்கள் நல்வாழ்வு பெறுவதற்கு இறையருள் அவசியம் என்பதையும் இடுக்கண் களைவதற்கும், ஆணவத்தை அகற்றுவதற்கும், இறை வழிபாடு அவசியம் என்பதையும், உணர்ந்து வருந்தி இறைவனை வழிபட்டால் பாவங்களை இறைவன் மன்னிப்பார் என்பதையும் வயிரவன் கோயில் புராணம் வலியுறுத்துகிறது.
பாயிரத்திலுள்ள இறைவணக்கப் பாடல்களும் இந்திரன், ததீசி முனிவர், சுக்கிரன், தேவர்கள் முதலியோர் வளரொளிநாதரையும், வயிரவமூர்த்தியையும், கற்பக விநாயகரையும் துதிக்கும் பாடல்களும் உள்ளத்தை உருக்குபவை. இப்புராணத்தை எளிய உரைநடையில் சுருக்கி ஆக்கித்தருமாறு திருவண்ணாமலை ஆதினப் புலவர், பண்டித வித்வான் மு. முத்துவேங்கடாசலம் அவர்களை வேண்டிக் கொண்டேன். அவர்களும் தம் முதிர்ந்த வயதிலும் இப்பணியைச் செவ்வனே செய்து அதை வெளியிடுவதில் யுக்தானுசாரமாகக் கூட்டியோ, குறைத்தோ செய்து கொள்வதற்கு அன்புடன் எனக்கு அனுமதி அளித்தார்கள். அவர்கள் பண்டிதமணி மு.கதிரேசன் செட்டியார் அவர்களின் நெருங்கிய நண்பரும் ஆவார்கள். அன்னாருக்கு அருள்மிகு மார்த்தாண்ட வைரவர் அருளால் 19.3.95 அன்று காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் புதுக்கோட்டை முகாமில் அவருடைய ஞான தானப் பணியைப் பாராட்டிப் பொன்னாடை அணிவித்துச் சிறப்பித்துள்ளார்கள்.

வயிரவன் கோயிற் புராணம் மொத்தம் 17 படலங்களைக் கொண்டதாகும். மொத்தம் 1152 செய்யுட்கள் உள்ளன. அவற்றுள் நாட்டுப் படலம், நகரப் படலம், நைமிசப் படலம், புராண வரலாற்றுப் படலம், தலவிசேடப் படலம், தீர்த்த விசேடப் படலம் ஆகியவற்றைத் தவிர்த்தும், பாயிரத்தைச் செய்யுள் வடிவத்திலேயே கொடுத்தும், எஞ்சிய பத்துப் படலங்களுக்கு எளிய உரைநடைச் சுருக்கம் தரப்பட்டுள்ளது.
வயிரவன் கோயில் தலம் கீழ்க் கண்ட பெயர்களில் இப்புராணத்தில் குறிக்கப்படுகிறது: - வடுகநாதபுரி, வடுகநாதபுரம், வடுகன் மூதூர், வயிரவ நகர், வயிரவ மாபுரம்.
அரக்கர்களால் ஏற்பட்ட துன்பத்தினின்று மீள்வதற்காகத் தேவர்கள் வளரொளிநாதரிடம் அடைக்கலம் புகுந்தனர். அவர்களைக் காப்பாற்ற இறைவன் வயிரவக் கோலம் பூண்டார். கற்பக விநாயகர் தலைமையில் அரக்கர்களை சம்ஹாரம் செய்து, இறுதியில் வயிரவமூர்த்தி அரக்கர் தலைவனை அழித்துத் தேவர்களைக் காப்பாற்றினார். இந்திரன், ததீசிமுனிவர், சந்திரன், சுக்கிரன் முதலியோர் இத்தலத்தில் பூசனை செய்து பாவம் நீங்கினர். புராண நிறைவில் கிரிகரப் படலத்தில் நகரத்தார் வரலாறும், ஒன்பது நகரக் கோயில்கள் ஏற்பட்ட விவரமும் கூறப்படுகிறது. மேலும் இளையாற்றங்குடி, பிள்ளையார்பட்டி ஆகிய தலங்களின் பெருமையும் கூறப்படுகிறது.
சிவபுராணத்தைக் கேட்பதாலும், படிப்பதாலும், உயிர்கள் சிவகதி அடையும் என்று ஆன்றோர்கள் கூறுகிறார்கள்.
“திருத்தகு சிவபுராண சிரவண விசேடத்தாலே
உருத்தகு பாவம் நீங்கும் புண்ணியம் ஒருங்குமேவும்
மருத்தகு பத்தி வாய்க்கும் மாதேவன் அருள் உண்டாகும்
கருத்தகு தீமையெல்லாம் கழன்று மேற்கதி உண்டாமால் 
-காசி ரகசியம்
எனவே எல்லோரும் இப்பயன்களை அடைய வேண்டும் என்ற கருத்தில் இந்நூலை வெளியிடுகின்றேன்.
வயிரவன்பட்டித் தலச் சிறப்பு
நகர வயிரவன்பட்டித் தலம் காரைக்குடி – திருப்பத்தூர் நெடுஞ்சாலையில் பிள்ளையார்பட்டியை அடுத்து அழகிய இயற்கைச் சூழலில் அமைந்துள்ளது. சோழ அரசனால் ஏற்பட்ட இடையூறுகள் காரணமாகச் சோழ நாட்டிலிருந்து தென்பாண்டி நாட்டிற்கு வந்த நகரத்தார் சமூகத்தினருக்கு கி.பி. 718ல் ஒன்பது நகரக்கோயில்கள் ஏற்பட்டன. இவ்வொன்பது சிவாலயங்களுள் வடிவுடையம்மை உடனாய வளரொளிநாதர் திருக்கோயிலும் ஒன்றாகும்.


“விரித்த பல் கதிர்கொள் சூலும் வெடிபடு தமருகங்கை
தரித்ததோர் கோலகால பைரவனாகி வேழம்
உரித்து உமை அஞ்சக்கண்டு ஒண்டிரு மணிவாய் விள்ளச்
சிரித்தருள் செய்தார் சேறைச் செந்நெறிச் செல்வனாரே
என்று அப்பர் சுவாமிகள் போற்றிய வயிரவநாதர் இத்தலத்தில் சிறப்பாக விளங்குகிறார்.
“நஞ்சினை உண்டிருள் கண்டர் பண்டு அந்தகனைச் செற்ற
வெஞ்சின மூவிலைச் சூலத்தர் வீழி மிழலையார்
அஞ்சனக் கண்ணுமை பங்கினர் கங்கையங்காடிய
மஞ்சனக் செஞ்சடையார் என வல்வினை மாயுமே.
என்னும் சம்பந்தர் பாடல் வயிரவரைக் குறிப்பிடுவதாகக் கூறப்படுகிறது.
வயிரவர் சிவ மூர்த்தங்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார். க்ஷேத்திரங்களைக் காக்கின்றமையால் க்ஷேத்திரபாலகர் எனவும் அழைக்கப்படுகிறார். நான்மறைகளே நாய் வடிவுடன் வயிரவருக்கு வாகனமாக விளங்குகின்றன. பிரம்மனின் அகந்தையை வயிரவர் அடக்கினார் என்பது கந்த புராணம்.
திருப்பத்தூரில் உள்ள பைரவர்கோயில் வைரவருக்குச் சிரசுஸ்தானமாகவும், வயிரவன்பட்டியில் உள்ள வயிரவர் கோயில் இதயஸ்தானமாகவும் இலுப்பைக்குடியிலுள்ள வைரவர்கோயில் பாதஸ்தானமாகவும் விளங்குகின்றன.
வயிரவன்பட்டியில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் சஷ்டியன்று சம்பாசஷ்டி விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அன்று வயிரவமூர்த்தி அரக்கனை சம்ஹாரம் செய்கிறார். சம்ஹார சஷ்டி விழா என்பது தற்சமயம் சம்பாசஷ்டி விழா என்று அழைக்கப்படுகிறது.
சிற்பங்களின் சிறப்பு
வயிரவன் கோயிலில் காணப்படும் சிற்பங்கள் நகரத்தார்களின் தெய்வத் திருப்பணிகளின் மகுடமாகத் திகழ்கின்றன. இக்கோயிலின் கருங்கல் திருப்பணி கி.பி. 1864ம் ஆண்டில் நகரத்தார்களால் துவங்கப்பட்டு, கி.பி. 1894ம் ஆண்டு சிறந்த சிற்ப வேலைப்பாடுகளுடன் நிறைவேறியது. நாற்பது ஆண்டுகாலம் வயிரவன்பட்டியிலேயே தங்கி இருந்து, வயிரவன் கோயிலைச் சிறப்பாகக் கட்டி முடிப்பதற்கு உறுதுணையாக இருந்த பெருமை தெய்வநாயக வகுப்பைச் சேர்ந்த கண்டனூர் அ.நா. குடும்பத்தினரான திரு. நா.அ.ராம. இராமசாமி செட்டியார் அவர்களைச் சாரும்.
சண்டீசுவரர் எழுந்தருளியுள்ள தனிக்கோயில் ஒரே கல்லினால் ஆனது. சுமார் 20 டன் எடையுள்ள கல்லை குன்றக்குடி – தருப்பத்தூர் நெடுஞ்சாலைக்குத் தெற்கேயுள்ள மலையிலிருந்து ஒரே கல்லாக வெட்டி எடுத்து வந்து குடைந்து அதில் சண்டீசுவரரை எழுந்தருளச் செய்திருக்கிறார்கள். அந்தக்கல் எடுக்கப்பட்ட இடத்தில் ஏற்பட்ட பள்ளத்திற்குச் சண்டீஸ்வரர் மலைப்பள்ளம் என்று பெயர்.
சண்டீஸ்வரர் சந்நிதிக்குக் கீழ்புறம் வளரொளிநாதரின் திருமாளிகை வடக்குச் சுவரில் ராமபிரான் ஆஞ்சநேயருக்கு முன்பாகக் கைகூப்பி நிற்கும் கோலத்தில் காணப்படுகிறார். இது ஒரு அரிய அழகிய சிற்பம்.
நடராசர் சன்னிதியில் காணப்படும் இரண்டு குதிரை வீரர் சிற்பங்கள் அற்புதமானவை. குதிரை வீர்ர் சிற்பத்துக்கு வடக்கில் கண்ணப்பர் சிற்பம் கண்கொள்ளாக் காட்சியாகும்.
வயிரவர் சிற்பம் வனப்பு மிக்கதாகும். வயிரவர் பத்மபீடத்தில் நின்ற திருக்கோலத்தில் காணப்படுகிறார். அக்கினி கேசத் தலைக்கோலமும், ஆபரணங்கள் நிறைந்த மார்பும் காணப்படுகின்றன. நான்கு கரங்களில் உடுக்கை, பாம்பு, சூலம், கபாலம் ஆகியவற்றை ஏந்தியுள்ளார். வயிரவருக்குப் பின்புறம் அவரது வாகனமான நாய் நின்ற நிலையில் காணப்படுகிறது.
வயிரவன் கோயில் விமானங்களிலும், மண்டப விமானங்களிலும் மொத்தம் 1416 சுதைச் சிற்பங்கள் உள்ளன. இவை மிகுந்த கலை அழகு உடையவை.
வயிரவன் கோயிலில் உள்ள முதல் திருச்சுற்றில் வடகிழக்குக் கூரையில் வயிரவன் கோயில் தலபுராணத் தொடர்பான ஓவியங்கள் காணப்படுகின்றன. தென்கிழக்குக் கூரையில் இராமாயணக் காட்சிகள் ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளன. இவை மிகுந்த கலை நுணுக்கம் கொண்டவை.
வயிரவன் கோயிலின் சிற்பங்களைப் பற்றியும் ஓவியங்களைப் பற்றியும் விவரமாகத் தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் டாக்டர் வ. தேனப்பன் அவர்கள் மிக நுணுக்கமாக ஆராய்ச்சி செய்து வெளியிட்டிருக்கும் ‘ஒன்பது நகரக்கோயில்கள்’ என்ற நூலைப் படிக்க வேண்டுகிறேன் (தேவக்கோட்டை தேன்வள்ளியம்மை பதிப்பக வெளியீடு).
நகரவயிரவன்பட்டியின் தலச்சிறப்பை அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தின் காரணமாக இச்சிறு நூலை வெளியிடுகிறேன். முன்னுரையில் வயிரவன் கோயிலைப் பற்றிய சிறப்பை நான் எழுதுவதற்குப் பெரிதும் எனக்குத் துணைபுரிந்தவை 1982ம் ஆண்டு நகர வயிரவன் கோயில் திருக்குட நன்னீராட்டு விழாச் சிறப்பு மலரில் வெளிவந்த டாக்டர் சுப. அண்ணாமலை அவர்களின் கட்டுரையும், ராயவரம் உயர்திரு. ப.வ. ராம. குழந்தையன் செட்டியார் அவர்களின் கட்டுரையும், டாக்டர் வ.தேனப்பன் அவர்கள் எழுதிய சிறந்த ஆராய்ச்சி நூலான ‘ஒன்பது நகரக் கோயில்கள்’ என்ற நூலும் ஆகும். மேற்கண்ட பெரியோர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எனது இந்தச் சிறிய நூல் வெளியீட்டுப் பணியில் என்னை ஊக்குவிக்குமாறு வயிரவ நாதரின் பக்தகோடிப் பெருமக்களையும், தமிழன்பர்களையும், பணிவுடன் வேண்டுகிறேன்.